துணை ஆணையர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து: உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

சென்னை: காவல் நிலைய சித்திரவதை தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட காவல் துறை துணை ஆணையர் அதிவீரபாண்டியன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. அபிராமபுரம் காவல் நிலையத்தில் கடந்த 2014ம் ஆண்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட உமாபதி என்பவரை, போலீசார் காவல் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து, இந்த புகார் மீது விசாரணை நடத்துமாறு அப்போது கீழ்ப்பாக்கம் போலீஸ் துணை கமிஷனராக இருந்த அதிவீர பாண்டியனை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய அதிவீரபாண்டியன், 2021 மார்ச் 4ம் தேதி விசாரணை நடத்தி அறிக்கை அளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட அபிராமபுரம் இன்ஸ்பெக்டர் இளையராஜா, தலைமை காவலர் வடிவேலு, எஸ்.ஐ கலைச்செல்வி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் இளையராஜா, தலைமை காவலர் வடிவேலு, எஸ்.ஐ கலைச்செல்வி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாதிக்கப்பட்ட உமாபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, துணை ஆணையர் கண்துடைப்பு விசாரணை நடத்தியுள்ளார். தவறு செய்தவர்களுக்கு ஆதரவாக விசாரணை அறிக்கையில் கூறியுள்ளார். அதனால் அவர் மீது டிஜிபி துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று 2023ல் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து அதிவீரபாண்டியன் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.  மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.ராஜேந்திர பிரசாத் ஆஜராகி, மனுதாரர் சம்மந்தப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாகத்தான் செயல்பட்டுள்ளார். உமாபதி தாக்கல் செய்த மனுவில் மனுதாரரான அப்போதைய கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் அதிவீரபாண்டியன் மூன்றாம் நபர்தான்.

அவர் மனுவில் எதிர் மனுதாரராக சேர்க்கப்படவில்லை என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் மனுதாரர் கண்துடைப்பு விசாரணை நடத்தியுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார். மனுதாரர் இந்த வழக்கில் சேர்க்கப்படாத நிலையில் அவர் மீது எதிர்மறையான கருத்துகளை தெரிவிக்க கூடாது. அவர் மீது புகார்தாரர் எந்த குற்றச்சாட்டையும் கூறாத நிலையில் எப்படி துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்க முடியும்.

துணை ஆணையர் விசாரணை அதிகாரி மட்டுமே. எனவே, தனி நீதிபதி தனிப்பட்ட முறையில் புகார்தாரரின் மனுவில் கூறப்பட்டுள்ளதையும் தாண்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே, மனுதாரருக்கு எதிராக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவருக்கு எதிராக தனி நீதிபதி பிறப்பித்த கருத்துக்களை தனி நீதிபதியின் உத்தரவிலிருந்து நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories: