திருவாரூர்,ஜூன்26: திமுக முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்ல திருமண விழா திருவாரூர் காட்டூர் கலைஞர் கோட்டம் அஞ்சுகம் அம்மையார் அரங்கில் நேற்று காலை நடைபெற்றது. மதி கதிரவன் – த.மெளனிகா ஆகியோரது திருமணத்தை நடத்தி வைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,‘‘ உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம். நான் பல்வேறு வகைகளில் இந்த விழாவிலே பங்கேற்கிற போது மகிழ்ச்சி அடைந்துட்டு இருக்கிறேன். மதிவாணன் இல்லத்தில் நடைபெறக்கூடிய மண விழா நிகழ்ச்சி. இரண்டாவது மகிழ்ச்சி என்னன்னு சொன்னீங்கன்னா, கலைஞர் வளர்ந்த மண்ணில், கலைஞர் வளர்த்த மண்ணில் இந்த திருவாரூர் மண்ணில் நடைபெறக்கூடிய மணவிழா இந்த நிகழ்ச்சி. அப்படிப்பட்ட திருவாரூர் மண்ணிலே, அதுவும் தலைவர் பெயரால் அமைந்திருக்கக்கூடிய இந்த கலைஞர் கோட்டத்திலே, அதையும் தாண்டி சொல்லணும்னா, இந்த அரங்கம் கலைஞரை ஈன்றெடுத்த அவருடைய அன்னை, என்னுடைய பாட்டி அஞ்சுகம் அம்மையார் பெயரில் அமைந்திருக்கக்கூடிய இந்த அஞ்சுகம் அரங்கத்தில் நடைபெறக்கூடிய மண விழா.
ஆகவே நான் பல்வேறு கோணங்களில் இந்த விழாவிலே பங்கேற்கிற போது மகிழ்ச்சி அடைந்துட்டு இருக்கிறேன். மதிவாணன் குடும்பத்தில, நான் ஏற்கனவே அவருடைய சகோதரர் காமராஜ் அவர்களுடைய மண விழாவை நான் தான் நடத்தி வைத்தேன். நான் எண்ணிப் பார்க்கிறேன். ஏறக்குறைய நம்முடைய மதிவாணன் அவர்களும் இங்க எடுத்து சொன்னார். ஏறக்குறைய ஒரு 40 ஆண்டு காலமாக அவர் இந்த இயக்கத்தில் தன்னை ஒப்படைத்து கொண்டு, சிறப்பாக இயக்கத்திற்கு துணை நின்று கொண்டு இருக்கிறார். முதன் முதலில் 1986-ல் கிளை கழகத்தினுடைய செயலாளராக இருந்து, மாவட்ட கழகத்தினுடைய பிரதிநிதியாக 1996-ல் பொறுப்பேற்று, அதைத் தொடர்ந்து மாவட்டக் கழகத்தின் துணைச் செயலாளராகவும் கடமையை நிறைவேற்றி, அதற்கு பின்னால் ஆதிதிராவிடர் நலக் குழுவினுடைய துணைச் செயலாளராகவும் பொறுப்பேற்று, விவசாய தொழிலாளர் அணியின் செயலாளராகவும் பொறுப்பேற்று, அந்த அணியினுடைய தலைவராக பொறுப்பேற்று இன்றைக்கு செயலாற்றி கொண்டிருக்கிறார். ஆக இப்படி படிப்படியாக வளர்ந்து வந்திருக்கக்கூடியவர் மதிவாணன் அவர்கள்.
இது ஏதோ கட்சிப் பணியில் மட்டுமல்ல, மக்கள் பணியை எடுத்துட்டு பார்த்தீங்கன்னா, 1986-ல் ஊராட்சி மன்ற தலைவராக, அதைத் தொடர்ந்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தினுடைய தலைவராக, 1996-ல் ஊராட்சி ஒன்றியத்தினுடைய பெருந்தலைவராக பணியாற்றி இருக்கிறார்.
அதற்கு பிறகு 2006-ல் ஐந்தாம் முறையாக நம்முடைய தலைவர் கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்ற நேரத்தில் அவருடைய அமைச்சரவையிலே பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்று அந்தப் பணியையும் நிறைவேற்றி இருக்கிறார். அதற்குப் பின்னால் 2016-ல் கீழ்வேளூர் தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி இருக்கிறார். அதற்குப் பின்னால் 2021-ல் ஆறாம் முறையாக என்னுடைய தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றதற்குப் பின்னால், 2022-ல் தாட்கோவினுடைய தலைவராக இருந்து அவர் பணியாற்றி இருக்கிறார். இப்படி மாறி மாறி கழகத்திலும் மக்கள் பணியிலும் மட்டுமல்ல, கழகத்திற்கு ஏற்படக்கூடிய எந்த சோதனைகளாக இருந்தாலும் அதையும் தாண்டி அவர் தன்னுடைய கடமையை நிறைவேற்றி இருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி , முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொது செயலாளர் பொன்முடி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா, மாநில விவசாய அணி செயலாளர் ஏ.கேஎஸ். விஜயன், சி.பி.ஐ முன்னாள் மாநில செயலாளர் முத்தரசன், முன்னாள் அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, கோவி. செழியன், சிவி.கணேசன், அன்பில் மகேஷ், எம்பிக்கள் தஞ்சை முரசொலி, நாகை செல்வ ராஜ், எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், துரை. சந்திரசேகரன், மாரிமுத்து (சிபிஐ), மாவட்ட அவைத்தலைவர் மேலவாசல் தனராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.முன்னதாக, மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ வரவேற்றார். முன்னாள் அமைச்சர் மதிவாணன் நன்றி கூறினார்.
