லண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் வாங்கி மோசடி செய்தவர் வைர வியாபாரி நீரவ் மோடி. அவர் 2019ம் ஆண்டு லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நீரவ் மோடி கடந்த 2012ல் துபாயில் உள்ள தனது பயர்ஸ்டார் டைமண்ட் இப் இசட் இ என்ற நிறுவனத்திற்கு பேங்க் ஆப் இந்தியா வங்கியிடம் ரூ.38.9 கோடி கடன் வாங்கியிருந்தார். இந்தத் தொகையைத் திருப்பித் தரும்படி வங்கி கேட்டபோது, நீரவ் மோடி தரப்பில், இந்தக் கடன் ஒப்பந்தம் சட்டப்படி செல்லாது என்று கூறியுள்ளார்.
லண்டன் நீதிமன்றத்தில் பேங்க் ஆப் இந்தியா சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது நீரவ் மோடி தரப்பு வாதங்களை நிராகரித்த லண்டன் நீதிமன்ற நீதிபதி, பேங்க் ஆ ப் இந்தியா வங்கிக்கு நீரவ் மோடியிடம் பணம் வசூலிக்க உரிமையுள்ளதாக தீர்ப்பளித்தார். அசல் தொகை மற்றும் அதற்கான வட்டி சேர்த்து ரூ.100 கோடியை பேங்க் ஆப் இந்தியாவுக்கு நீரவ் மோடி செலுத்தியாக வேண்டும் என்றும் கூறினார்.
