காவிரி சங்கமனா!

குடகு மாவட்டத்தில் வாழும் `குடுவா இன’ மக்களுக்கு காவேரிதான் குலதெய்வம். ஒவ்வொரு வீட்டிலும் காவேரி நீர், கங்கை நீர் போல் பாதுகாக்கப்படும். இந்த காவேரியில் நடப்பதுதான் “காவேரி சங்கமனா’’. துலா மாதத்தின் முதல் நாள் `சங்கமனா’ கொண்டாடப்படுகிறது. தலைக் காவேரியில், காவேரிக்கு கோயில் உள்ளது. இங்கு அமைந்துள்ள நான்கு அடிக்கு நான்கு அடியில் உள்ள தொட்டியில், காவேரி உற்பத்தியாகிறது. வருடத்திற்கு ஒரு நாள் மட்டும் குபுக்.. குபுக்.. என குறிப்பிட்ட தொட்டியில் உற்பத்தியாகிறது. இந்த சிகரத்திற்கு, `பிரம்மகிரி சிகரம்’ என்று பெயர். பிரம்மகிரி சிகரத்தில், ஏழு குழிகள் உள்ளன. காரணம் கேட்டால், `சப்த ரிஷிகள் யாகம்’ செய்த இடம் என்கின்றனர்.சின்ன தொட்டியில் கிளம்பும் நீரை புனிதமானதாக சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

நீர் நிரம்பும் முதல் தொட்டியை `பிரம்ம குண்டிகே’ என கன்னட மொழியில் அழைக்கின்றனர். இந்த நீர் வெளிப்படும் போது, பிரவாகமாய் தொட்டி யைவிட்டு வெளியில் வழிந்தால், கெட்ட சகுனம். இதனால் இந்த பகுதிக்கு கேடு விளையும் என்கின்றனர். பிறகு, தண்ணீர் இரண்டாவது பெரிய தொட்டியில் விழுந்து, அடுத்து அருகில் உள்ள மூன்றாவது குளத்திற்குச் செல்கிறது. அங்கு மறைந்து, சுமார் 8 கிலோமீட்டர் தள்ளி பாகமண்டலாவில் வெளிப்படுகிறது.

பிரம்ம குண்டிகேயில் இருந்து நீர் ஊற்று எடுக்கும் நீரூற்று வடிவில் காவேரிதேவி வருவதாக நம்பப்படுகிறது. சங்கமனா நேரம் நெருங்கும் போது, பக்தர்கள் மந்திரம் ஓதி, காவேரி அம்மனை வரவேற்கின்றனர். அர்ச்சகர்கள் வேத பாராயணம் செய்து, பக்தர்கள் மீது புனித நீரை தெளிக்கின்றனர். அதன் பின்னர், மக்கள் பிரம்ம குண்டிகே முன் உள்ள பெரிய குளத்தில் நீராடி, பானைகளில் புனித நீரை எடுத்து செல்கின்றனர். காவேரி வெளிப்படும் வேளையில், பெரிய குளத்தை ஒட்டிய காவேரி கோயிலில் பூஜை, தீபாராதனை நடக்கிறது. அன்று காவேரிதேவி நகைகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்படுகிறாள். நகைகள் `பதக்’ அல்லது `மங்கள சூத்திரம்’ எனவும் பூஜையை கன்னி பூஜை எனவும் அழைக்கின்றனர்.

இங்கும் காணிக்கை, பாக்கு, வெற்றிலை, கண்ணாடி வளையல்கள்தான். வீடுகளில் குடுவா மக்கள் தேங்காய் அல்லது வெள்ளரிக்காய் மீது சமைக்கப்படாத அரிசியை கொட்டி, சிவப்புத் துணியால் போர்த்தியும், பூஜை செய்கின்றனர்.குடுவா மக்கள் தங்கள் நிலத்தில் விளைச்சலும், அறுவடையும் சிறப்பாக அமைய காவேரியே காரணம் என நம்புகின்றனர். பூஜிக்கின்ற சிலர், வெற்றிலை, பாக்கு, பழம், கண்ணாடி, வளையல்களை வைத்து பூஜை செய்து பிறகு அவற்றை தங்கள் குடுவா இன சுமங்கலி பெண்களுக்கு வழங்குகின்றனர்.

காவிரி சங்கமனாவின் போது, பலர் வேண்டிக் கொண்டு வந்து மொட்டை போட்டு ஸ்நானம் செய்து, காவேரியையும் அம்மனையும் வணங்கிச் செல்கின்றனர். இது சமயம் ஒரு மாதம் “காவிரி ஜாத்ரா’’ நடக்கிறது. தினமும் மக்கள் இங்கு குளிப்பதுடன், அடுத்து பாகமண்டலா சென்று காவிரி, கன்னிகே கஜ்யோதி என மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் குளிக்கின்றனர். அருகில் உள்ள `பகண்டேஸ்வரா’ கோயிலிலும் தரிசனம் செய்கின்றனர்.

16ம் நூற்றாண்டு சார்ந்த கோயில். 18ம் நூற்றாண்டில், மைசூர் மன்னர் வீர ராஜேந்திரரால் புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது. காவேரி ஆற்றின் மேல்பகுதியில் உள்ளது. இதனை `சங்கம சேத்திர கோயில்’ எனவும் அழைக்கின்றனர். பகண்ட முனிவர் இங்கு தவம்செய்து சிவனைத் தரிசனம் செய்து எழுப்பிய லிங்கம் இது. இதனால், கோயிலுக்குள் உள்ள மூலவருக்கு பகண்டேஸ்வரர் என பெயர்.

மூன்று நிலைகளுடன் கூடிய நூதன முன் சிறு கோபுரத்தை காண்கிறோம். கேரள பாணி சிவப்பு டைல்ஸ் கூரையுடன் உள்பகுதிகள் எழுந்துள்ளன. ஒரு பெரிய முற்றத்தை உள்ளே காணலாம்.மூலவர், எளிமையான அலங்காரத்தில் நிறைவாக காட்சி தருகிறார். இங்கு பிரம்மாவின் சுயம்பு உள்ளதாம். அதனை அப்படி வணங்கக் கூடாதாம்.

அதனால் சுப்ரமணியர் என பெயரிட்டு வணங்குகின்றனர். கூடுதலாக இங்கு மகாவிஷ்ணு மற்றும் கணபதி சந்நதிகள் உள்ளன. மர வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்களும் உள்ளன. கோயிலுக்கு எதிரில் குளம் உள்ளது. அதில் ஏராளமான மீன்கள் உள்ளன. இங்குள்ள திரிவேணியில், சிலர் கர்ம காரியங்களை செய்கின்றனர். கோயிலில் மதிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. கோயிலை சுற்றி இயற்கைக் காட்சிகள் ரம்யமாக உள்ளன. அமைதியான இடம், தியானிக்க சிறந்த இடம்.

கோயில் திறப்பு: காலை 6:00 – 1.30, மாலை 3:00 – 8:00 மணிவரை.

எப்படி செல்வது: பெங்களூர் – மடிக்கேரி 254.4கி.மீட்டர். மடிக்கேரி – தலைக்காவேரி – 43.5கி.மீட்டர். பாகமண்டலா – தலைக்காவேரி – 8கி.மீட்டர்.

ராஜிராதா

Related Stories: