×

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏமாற்றத்துடன் திரும்பும் நோயாளிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு

*கடைகளில் காசு கொடுத்து வாங்குவதாக ஏழைகள் வேதனை

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 38 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடு காரணமாக கடைகளில் காசு கொடுத்து வாங்குவதாக ஏழைகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 38 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது. பெரும்பாலும் ஏழை, எளிய மக்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களை நம்பியே உள்ளனர்.

இதனால் மருந்துகள் வாங்கவும், காய்ச்சல், சளி உள்ளிட்டவற்றுக்கு சிகிச்சை பெறவும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இதில் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்களுக்கு மாதந்தோறும் மருந்துகளை வாங்கிச்செல்கின்றனர். இதுதவிர கர்ப்பிணிகள் பரிசோதனைகளுக்கு வருகின்றனர்.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த சில வாரங்களாக அத்தியாவசிய மருந்து மற்றும் மாத்திரைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், ‘தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில் இருந்து மருந்துப்பொருட்கள் அனுப்பப்படும் செயல்முறை தற்காலிகமாக தாமதமாகியுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் மருந்துகள் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என கூறுகிறார்களாம். இதனால் மருந்துகளை வாங்க வரும் நோயாளிகள் தினமும் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

மருந்து தட்டுப்பாடு காரணமாக, நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மாதம்தோறும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டிய மாத்திரைகள் சில வாரங்களாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், வேறு வழியின்றி தினக்கூலி வேலைக்கு செல்லும் ஏழை மக்கள், தங்களின் அன்றாட வருமானத்தை இழந்து, மெடிக்கல் ஷாப்களில் அதிக பணம் கொடுத்து மாத்திரைகளை வாங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் அரசு மருத்துவமனையில் இலவசமாக பெற்று வந்த மாத்திரைகளை இப்போது தனியார் கடைகளில் அதிக விலை கொடுத்து வாங்குவதால், எங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என முதியவர்களும், ஏழை தொழிலாளர்களும் கண்ணீருடன் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுமட்டுமன்றி, தற்போதைய பருவநிலை மாற்றத்தால் கிராமப்புறங்களில் பரவி வரும் சாதாரண தலைவலி, கடுமையான சளி, இருமல் மற்றும் உடல்வலி போன்ற பாதிப்புகளுக்கு கூட அடிப்படை மாத்திரைகள், மருந்துகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படுவதில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் மாத்திரைகள் இல்லை என்று கூறி, மருந்துகளை வெளியில் வாங்கிக்கொள்ளும்படி மருத்துவர்கள் பரிந்துரை சீட்டுகளை எழுதி தருவதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன.

எனவே ஏழை, எளிய மக்களின் அத்தியாவசிய ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகமும் மாநில சுகாதாரத்துறையும் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் தேவையான நீரிழிவு, ரத்த அழுத்தம், சளி, காய்ச்சல் போன்ற அனைத்து அத்தியாவசிய மருந்துகளையும் தட்டுப்பாடின்றி உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் வயது வந்தோரில் 33.9% பேருக்கு ரத்த அழுத்தம்

உலக சுகாதார அமைப்பின் ‘ஸ்டெப்ஸ்’ என்ற கணக்கெடுப்பின்படி, தமிழகத்தின் வயது வந்தோரில் சராசரியாக 33.9 சதவீதம் பேருக்கு ரத்த அழுத்த பாதிப்பும், கிராமப்புறங்களில் பத்தாண்டுகளில் இது 29.8 சதவீதமாக அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த திமுக ஆட்சியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தமிழக சுகாதாரத்துறை நடத்திய பரிசோதனையில், மாநிலம் முழுவதும் சுமார் 55.1 லட்சம் பேர் உயர் ரத்த அழுத்த பாதிப்பிற்கு ஆளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல், தமிழகத்தில் சுமார் 31.53 லட்சம் பேர் நீரிழிவு(சர்க்கரை நோய்) பாதிப்பை கொண்டுள்ளனர். இதில் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகிய இரண்டு நாள்பட்ட பாதிப்புகளும் ஒரே நேரத்தில் கொண்ட நோயாளிகளின் எண்ணிக்கை 26.15 லட்சமாக உள்ளது.

மாநிலத்தில் லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் இந்த நோய்களுக்கான மாத்திரைகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாகவே இலவசமாக பெற்று வரும் சூழலில், அங்கு மருந்து தட்டுப்பாடு நிலவுவது மக்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

Tags : Tirupathur district ,Tirupathur ,
× RELATED கல்பாக்கம் அருகே 14 வயது சிறுமியைக்...