×

5 நாட்களாகியும் குழந்தையின் பிரேத பரிசோதனை வராததால் மருத்துவர்களிடம் உறவினர்கள் வாக்குவாதம்

*மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

கடலூர் : ஐந்து நாட்களாகியும் குழந்தையின் பிரேத பரிசோதனை வராததால் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களிடம் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர் வல்லரசு(24), கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரவீனா(23). இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் பிரவீனா பிரசவத்திற்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 17ம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அப்போது குழந்தையின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் எந்தவித தகவலையும் பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் 18ம் தேதி குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் பெற்றோர் மற்றும் இவர்களது உறவினர்கள் மருத்துவமனை மகப்பேறு பிரிவின் முன் திரண்டு குழந்தையின் உடலை வாங்க மறுத்து மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி பிரேத பரிசோதனை செய்த பின்னரே உண்மை நிலவரம் என்னவென்று அறிந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்று காலை குழந்தையின் உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்து குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், மருத்துவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கடலூர் உட்கோட்ட டிஎஸ்பி தமிழ் இனியன் மற்றும் போலீசார் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை சமாதான படுத்தினர்.

அப்போது அவர்கள் திடீரென கடலூர்-பண்ருட்டி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அவர்கள் குழந்தையின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், 5 நாட்கள் ஆகியும் இதுவரை பிரேத பரிசோதனை முடிவுகள் வரவில்லை என்றும், பெற்றோர் அனுமதி இன்றி பிரேத பரிசோதனைக்கு குழந்தையின் உடலை சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு ஏன் அனுப்பி வைத்தார்கள் என்று கூறி தொடர்ந்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Cuddalore ,Vallarasu ,Devanampattinam, Cuddalore ,Praveena ,
× RELATED பார் கவுன்சில் உறுப்பினராக அமல்ராஜ் தேர்வு