புதுக்கோட்டை, ஜூன் 23: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் டெங்கு மற்றும் கொசுப்புழு ஒழிப்பு ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட வலியுறுத்தி, புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் படுத்து உறங்கும் போராட்டம் அறிவித்திருந்தனர். இது சம்பந்தமாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நூற்றுக்கு மேற்பட்டோர் வருகை தந்த போது துறை சார்ந்த அதிகாரிகள் போராட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பெண் அதிகாரியிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
அந்த கோரிக்கை மனுவில், புதுக்கோட்டை மாவட்டத்தின் 13 ஒன்றியங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் சுமார் 260 ஊழியர்கள் டெங்கு மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மழை வெள்ளப்பெருக்கு, கொரோனா பேரிடர் காலம், மற்றும் டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா போன்ற ஆபத்தான நோய்த்தொற்றுக் காலங்களிலும் தங்களின் உயிரைப் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்கள். இருப்பினும், மாவட்ட நிர்வாகம் இவர்களைத் திடீரென வேலை நிறுத்தம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதால், இத்தொழிலாளர்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊழியர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் உடனடியாக அனைத்து ஊழியர்களுக்கும் எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாகப் பணி வழங்க வேண்டும்.
மாதந்தோறும் பணி உத்தரவு வழங்குவதை விடுத்து, குறைந்தபட்சம் மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது பணி உத்தரவு வழங்கப்பட வேண்டும். வீடு வீடாகச் சென்று நோய்த்தொற்றைக் கண்டறியும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கும் அங்கீகாரத்திற்கும் பணியாளர் அடையாள அட்டை வழங்க வேண்டும். பணியின் போது பயன்படுத்த முகக்கவசம் மற்றும் கையுறை போன்ற அத்தியாவசிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். மக்கள் மத்தியில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள ஊழியர்களுக்குத் தனிச் சீருடை வழங்க வேண்டும். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசாணையின்படி மட்டுமே வேலை வாங்க வேண்டும்.
அதை விடுத்து, சுமை தூக்குவது, புல் வெட்டுவது, மருத்துவர் வீட்டில் வேலை பார்க்கச் சொல்வது போன்ற மாற்று வேலைகளைத் திணிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், மாதாந்திர சம்பளத்தை உரிய தேதிகளில் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். மேலும், குறைந்தபட்ச சம்பள அரசாணை 2D(62)-ன்படி சம்பளம் வழங்கப்பட வேண்டும், பணியில் இருக்கும் DBC (Dengue Breeding Checkers) ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காப்பீடு (Insurance) திட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும். தங்களின் நியாயமான இந்தக் கோரிக்கைகளை உடனடியாக நடவடிக்கை எடுத்து சரி செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் மீண்டும் நாங்கள் அறிவித்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவாயிலில் படுத்து உருண்டு அங்கபிரதட்சணம் செய்யும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என சங்க நிர்வாகிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
