சென்னை: புதிய நடுவர் மன்றம் அமைவதால் தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதை மிக உறுதியுடன் தெரிவிப்பதாக அமைச்சர் என்.ஆனந்த் கூறினார். சட்டப்பேரவையில் நேற்று ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் பேசியதாவது: காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், நமது மாநிலத்தின் நதிநீர் உரிமைகளையும் காப்பதில் இந்த அரசு துளியும் சமரசம் செய்து கொள்ளாது.
கர்நாடகாவின் தற்போதைய முதல்வர் மேகதாது பிரச்னையை சமீபத்தில் எழுப்பிய உடனேயே, தமிழக முதல்வர் அரசு தலைமை வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசித்து, இப்பிரச்னை குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அறிவுறுத்தினார். அத்துடன் நிற்காமல், அடுத்த நாளே (26.5.2026) கடிதத்தின் வாயிலாகவும், 27ம் தேதி பிரதமரை நேரில் சந்தித்தும், மேகதாது திட்டத்திற்கு எவ்வித அனுமதியும் அளிக்க வேண்டாம் என மீண்டும் வலியுறுத்தினார். முதல்வர் கடந்த 25ம் தேதி உத்தரவிட்டதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு சார்பாக டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் மேகதாது திட்டத்தை எதிர்த்து 27ம் தேதி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவிரி நதிநீர் விவகாரத்தில் ஒருமனதாக இயற்றப்பட்ட தீர்மானத்தில், எதிர்க்கட்சி தலைவர் 4.3.2026 அன்று தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுக்கு மேகதாது அணை விவகாரம் குறித்து ஒரு புதிய நடுவர் மன்றம் அமைக்க முன்மொழிவுகள் அனுப்பியது குறித்தும் தீர்மானத்தில் சேர்க்க கோரிக்கை வைத்தார். அதன்படி, பேரவையில், 19.6.2026 அன்று நடுவர் மன்றம் அமைக்குமாறு வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் நகலை அன்றே தனது நேர்முக கடிதம் வாயிலாக இந்திய பிரதமருக்கு தமிழக முதல்வர் அனுப்பியுள்ளார்.
ஆனால், சிலர் நடுவர் மன்றம் அமைக்குமாறு கோருவது சரியான அணுகுமுறையல்ல என கருதுகின்றனர். சில தரப்பினர் பரப்பி வரும் தவறான புரிதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நமது அரசின் நேர்த்தியான அணுகுமுறை பற்றி இந்த மாமன்றத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன் புதிய நடுவர் மன்றம் அமைவதால் தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதை மிக உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
