அரசு விழாவில் புரோட்டோகால் விவகாரம்; தவெக எம்எல்ஏ பல்லவி அளித்த மனு மீது நடவடிக்கை இல்லை: சபாநாயகர் அறிவிப்பு

 

சென்னை: தவெக எம்எல்ஏ பல்லவி அளித்த மனு மீது நடவடிக்கை இல்லை என்று சபாநாயகர் பேரவையில் அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் ஒரு அறிவிப்பை வெளியிட்டு பேசியதாவது: கடந்த 4-6-2026 அன்று திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில், புதிய கட்டிட திறப்புவிழா நிகழ்ச்சியின் போது, குத்துவிளக்கு ஏற்றுவது தொடர்பான மரபு நெறிமுறை (Protocol) மீறப்பட்டதாக திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி ஒரு மனுவினை என்னிடம் அளித்தார். அந்த மனுவினை நான் நன்கு படித்துப் பார்த்து ஆய்வு செய்தேன். அதுகுறித்த சில கருத்துகளையும், அறிவுறுத்தல்களையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

அரசால் வெளியிட்டுள்ள மரபு நெறிமுறைகளின்படி, அரசமைப்பு தலைவர்கள் முதல் முக்கிய பிரமுகர்கள் வரை உள்ள ஒவ்வொருவரின் நிலைக்கு ஏற்ப முன்னுரிமை வரிசை முறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த முன்னுரிமை வரிசைப்படி சட்டமன்ற உறுப்பினர்களும், அரசுத்துறை உயர் அலுவலர்களும் தங்கள் கடமைகளையும், பொறுப்புகளையும் மற்றும் அதிகாரத்தையும் நன்கு உணர்ந்து, அதற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

திரு.வி.க.நகர் தொகுதியில், பள்ளி கட்டிட திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்ற நிகழ்வு, மரபு நெறிமுறை குறித்த புரிதல் இல்லாமல், தெரிந்தோ தெரியாமலோ அல்லது அறிந்தோ அறியாமலோ நடந்த அந்த நிகழ்வு இனிவரும் காலங்களில் தொடராது என நம்புகிறேன். அதனால், அந்த மனுவின் மீது மேல் நடவடிக்கை தேவையில்லை என கருதுகிறேன். உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதோ அல்லது வேறு வகையில் நடவடிக்கை எடுப்பதோ தேவையில்லை என்று கருதுகிறேன்.

மேலும், அனைத்து அரசு நிகழ்வுகளிலும், மரபு நெறிமுறைப்படி அந்த தொகுதியை சார்ந்த சட்டசபை உறுப்பினர்களுக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டு, சட்டசபை உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மற்றும் மரபு நெறிமுறைகளை கடைபிடிக்க நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அலுவலர்களுக்கும், அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு அரசு தலைமை செயலாளருக்கு உத்தரவிடுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: