விருதுநகர்: விருதுநகர் அருகே அரசு பஸ் டயரில் போல்ட்கள் கழன்று விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை நிறுத்தியதால் 50 பயணிகள் உயிர்தப்பினர். நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் இருந்து மதுரை நோக்கி நேற்று காலை அரசு பஸ் புறப்பட்டது. இந்த பஸ் பகல் 12.45 மணிக்கு விருதுநகர் நான்கு வழிச்சாலையில் அரசு போக்குவரத்து பணிமனையை தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது பஸ்சிலிருந்து ஏதோ ஒரு பொருள் கீழே விழும் சத்தம் கேட்டது. இதை கவனித்த டிரைவர், பஸ்சை நிறுத்த முயன்றார். அப்போது மீண்டும் சத்தம் கேட்கவே உடனடியாக டிரைவர் மிக சாமர்த்தியமாக பஸ்சை ஓரங்கட்டி நிறுத்தினார்.
பிறகு பஸ்சில் இருந்து கீழே இறங்கி பார்த்தபோது முன்பக்க இடதுபுற சக்கரத்தில் மறை கழண்டதால், 5 போல்ட் நட்டுகள் கட் ஆகி இருந்தது தெரிந்தது. பஸ் நிறுத்தப்பட்ட இடத்தின் அருகே 3, அங்கிருந்து 100 அடி தொலைவில் 2, 3 போல்ட் நட்டுகள் கழன்று கிடந்தன. பஸ் டிரைவர் சுதாரித்து உடனடியாக நிறுத்தியதால் சுமார் 50 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இல்லையென்றால், நான்கு வழிச்சாலையில் பஸ் சென்று கொண்டிருக்கும் போது, சக்கரம் கழன்றிருந்தால் தலைகுப்புற கவிழ்ந்து பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.
