விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்; சட்டமன்றத்தில் அனைவருக்கும் சரிசமமாக பேச சபாநாயகர் வாய்ப்பளிக்க வேண்டும்: பிரேமலதா பேச்சு

 

 

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு விருத்தாசலம் தொகுதி உறுப்பினர் பிரேமலதா (தேமுதிக) பேசியதாவது: இன்று பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதல்வருக்கு அவரது அண்ணன் கேப்டன் விஜயகாந்த் சார்பிலும் தேமுதிக சார்பிலும் பிறந்தநாள் வாழ்த்துகள். மேகதாது அணை, கவர்னர் உரை பற்றியான விவாதம் என ஒன்றரை மணி நேரமாக ஒரே டாப்பிக் தான் போய் கொண்டிருக்கிறது. நிறைய பேருக்கு பேச வாய்ப்பு கிடைக்கிறது, நிறைய பேருக்கு வாய்ப்பு கிடைக்காமலே போய் விடுகிறது.

கவர்னர் உரை ஆளுங்கட்சி உரையாக இருந்தது. கவர்னர் உரையில் 37 நிமிடங்கள் பேசிய ஆளுநர், அதில் 37 தடவை தமிழை தவறாக பேசினார் என்பது வருத்தம் அளிக்கிறது. நமது தலைவர்கள் அண்ணா, கலைஞர், காமராஜர், வேலுநாச்சியார் என அனைத்து தலைவர்களின் பெயர்களை உச்சரிக்கும் போது அத்தனை தவறுகள் இருந்தது. சபாநாயகர்: வேறு மாநிலத்தை சார்ந்த ஒரு ஆளுநர், நமது மாநிலத்திற்கு ஆளுநராக உள்ளார் புதிதாக தமிழகத்திற்கு வந்திருக்கிறார். அவர் தமிழில் பேச முயற்சித்ததை முதலில் நாம் பாராட்ட வேண்டும். மேற்கொண்டு அவர் பேசியது குறித்து விமர்சிக்க வேண்டாம்.

பிரேமலதா: நேற்று ஒரு கருப்பு தினம், அமோனியா தாக்குதலில் இத்தனை பேர் பாதிக்கப்பட்டது இதுதான் முதல் முறை. எல்லோருமே வயது குறைவான பெண்கள். ஒரு நிமிடம் அவர்களுக்காக மவுன அஞ்சலி செலுத்துவோம் என்று எதிர்பார்த்தேன். பெண்கள் என்பதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். காவிரி பிரச்னை தொடர்பாக, இருமாநில முதல்வர்களும் கலந்து பேசி நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

தண்ணீர் பாட்டிலும்… டம்ளர் விவாதமும்… உறுப்பினர்களிடையே கலகலப்பு
தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா பேசுகையில், ‘‘உறுப்பினர்களுக்கு டம்ளரில் தண்ணீர் வைக்கப்படுவதால் அவ்வப்போது தண்ணீரை நிரப்ப அவை ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். இது உறுப்பினர்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. எனவே, உறுப்பினர்களின் இருக்கைகளில் தண்ணீர் பாட்டில்கள் வைக்க வேண்டும்’’ என்று முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார்.
முன்னாள் முதல்வரும், திமுக உறுப்பினருமாகிய ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ‘‘அவை உறுப்பினர்களுக்கு கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை தூக்கி அடித்துவிடுவார்கள்’’ என்று நகைச்சுவையாக கூறினார்.

இதற்கு உடனடியாக பதிலளித்த பிரேமலதா, ‘‘வன்முறையாக தூக்கி அடிப்பதாக இருந்தால் டம்ளரைக்கூட தூக்கி அடிக்கலாம். நிச்சயம் அப்படி நடக்கக்கூடாது என்று நகைச்சுவையாக கூற, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவும், ஓபிஎஸ் அவர்களுக்கு முந்தைய அனுபவம் இருக்கிறது போல என்று கூற, அவையில் சிரிப்பலை எழுந்தது.

Related Stories: