சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல்லை சேர்ந்தவர் தினேஷ். தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் போலீஸ் ஏட்டு. இவரது மனைவி ரேணுகா தேவி(26). தம்பதிக்கு ஏற்கனவே ரித்திஷா(3) என்ற மகள் உள்ள நிலையில், 2வது பிரசவத்திற்காக விஸ்வநத்தம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை அறுவை சிகிச்சைக்காக பிரசவ வார்டிற்கு ரேணுகா தேவியை அழைத்துச் சென்றனர். ஆனால், சிறிது நேரத்தில் வயிற்றில் இருந்த சிசுவுடன் தாயும் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து குடும்பத்தாரும், உறவினர்களும் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தால் தாயும், சிசுவும் உயிரிழந்ததாக புகார் தெரிவித்து மருத்துவமனையை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால் உடலை எடுத்து சென்றபிறகு நிவாரணத்தொகை வழங்க இயலாது. நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்து கொள்கிறோம் என மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மருத்துவமனையை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 5 பெண்கள் உட்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
