நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை: சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கான காரணம் ஆராயப்பட்டது

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் நேற்று எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 53 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதில், அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி என்ற இடத்தைக்கூட அடைய முடியாமல் போனது. மேலும், இக்கட்சியின் வாக்கு சதவீதமும் இந்த முறை குறைந்தது.

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலர் தனது தொகுதிகளில் தோல்வியை சந்தித்தனர். இதனைத்தொடர்ந்து, அதிமுகவின் 4 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்ததால் இந்த எண்ணிக்கை 43ஆகக் குறைந்தது. மேலும், கட்சியின் தோல்வி மற்றும் உட்கட்சி பிரச்சனை காரணமாக அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தொடர்ந்து கட்சியில் இருந்து வெளியேறி வருகிறார்கள்.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியை சந்தித்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்டவாரியாக அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுக் கடந்த 13ம் தேதி, முதற்கட்டமாக காஞ்சிபுரம், உத்திரமேரூர்,ஸ்ரீபெரும்புதூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

அந்த வகையில் நேற்று காலை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகளுடம் கலந்தாலோசனைக் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. மேலும், முக்கிய நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தமிழ்மகன் உசேன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

இதில், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். அப்போது, நிர்வாகிகள் தங்களது மாவட்டங்களில் இருக்கும் உட்கட்சிப் பிரச்சனைகள் மற்றும் தேர்தலில் சந்தித்த பிரச்சனைகள் ஆகியவை குறித்த புகார்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாகத் தலைமைக்கு எடுத்துக் கூறியதாகக் கூறப்படுகிறது.

மேலும், நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்தும்; கட்சியின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தற்போது இருக்கும் இடத்தில் அவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. மேலும், எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் கட்சி நிர்வாகிகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அவர்கள் போட்டியிடும் வகையில் செயல்பட வேண்டும். உள்ளாட்சிப் பிரதிநிதித்துவத்தை அதிமுக அதிகரிக்க வேண்டும் எனப் பல்வேறு விஷயங்கள் குரித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.

ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது; கட்சி நிர்வாகிகளிடம் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகள் சந்தித்த பிரச்சனைகள் குறித்தும், வெற்றி தோல்வி குறித்தும் சுதந்திரமாக யார் வேண்டுமானாலும் எந்தக் கருத்தை வேண்டுமானாலும் சொல்லலாம் என்று தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் பெரும்பான்மையானவர்கள் கடந்தகால, நிகழ்காலக் கருத்துகளை வெளிப்படையாக முன்வைத்தார்கள். அதை உள்வாங்கிக் கொண்ட பொதுச்செயலாளர் நிர்வாகிகளின் கருத்திற்கு ஏற்ப இயக்கத்தை வழி நடத்துவோம் என்று உறுதியளித்து இருக்கிறார். உள்ளாட்சி தேர்தல் மற்றும் அதற்கு முன்பு இடைத்தேர்தல் வரும்; எதற்கும் தயார். இவ்வாறு அவர் கூறினார்.

* தற்கொலை செய்துகொண்டவர் குடும்பத்துக்கு நிதியுதவி
அதிமுகவில் நிலவி வரும் உள்கட்சிப் பிரச்சனை, பிளவு ஆகிய காரணங்களால் மனஉளைச்சலுக்கு உள்ளான கும்பகோணத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி மகேந்திரன் என்பவர் கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்டார்.  அவரின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் குடும்ப நல நிதியுதவியாக ரூ.30 லட்சம், தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் 25 லட்சம் என மொத்தம் ரூ.55 லட்சம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் மறைந்த மகேந்திரனின் குடும்பத்தாரிடம் ரூ.55 லட்சத்திற்கான வரைவோலையை வழங்கிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

* அந்த குடிகார குள்ளநரி யார்?
கட்சி அலுவலகத்தின் எதிரில் அதிமுக நிர்வாகிகள் பதாகை ஒன்றை வைத்துள்ளனர். அதில், ‘‘எத்தனை ‘குடிகார குள்ளநரிகள்’ ஊளையிட்டாலும் சிங்கத் தமிழர் எடப்பாடியாரின் முன் ‘குள்ளநரிகள் ஊளை’ எடுபடாது. தொண்டர்கள் என்றென்றும் கழகப் பொதுச்செயலாளர் வழியில்’’ என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்தது.

மேலும், அதில் ‘அன்று கும்பலாக வந்து ஊளையிட்ட குடிகார குள்ளநரி’ என்ற வாசகத்துடன் பின்னணியில் சிலர் நிற்க குள்ளநரி ஒன்று பேட்டி கொடுப்பது போலவும்; அடுத்து, ‘இன்று அனாதையாக வந்து ஓலம்விடும் குடிகார குள்ளநரி’ என்ற வாசகத்துடன் குள்ளநரி தனியாக இருப்பது போன்றும் வடிவமைக்கப்பட்ட பதாகை வைக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த பதாகையில் குறிப்பிடப்பட்டுள்ள குள்ளநரி யார்? யார்மீது இந்த விமர்சனம் வைக்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், அவ்வப்போது போதையில் உளறும் முன்னாள் அமைச்சரைக் குறிப்பிடுகிறார்களோ என்று சமூக வலதளங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Related Stories: