மாநகராட்சி தூய்மைப் பணியை தனியார்மயமாக்குவதா? தவெக அரசுக்கு தலைவர்கள் கடும் கண்டனம்

சென்னை: 12 மாநகராட்சிகளின் தூய்மைப் பணியை தனியார் மயமாக்குவதா என்று தவெக அரசுக்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: 12 மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணியை தனியாருக்கு விடுவதற்கான முயற்சியை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும். தூய்மைப் பணியாளர்கள் நியமனம், நிர்வாகம் அனைத்தும் அரசின் நேரடிப் பொறுப்பில் மட்டுமே இருக்க வேண்டும். இந்த அத்தியாவசியச் சேவையை, எந்த நிலையிலும் தனியார் கையில் ஒப்படைக்கக் கூடாது.

எஸ்டிபிஐ கட்சி மாநில பொதுச் செயலாளர் அபுபக்கர்: 12 மாநகராட்சிகளின் தூய்மைப் பணிகளை தனியார் பங்களிப்புடன் மேற்கொள்வதற்காக, விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு அரசு தற்போது டெண்டர் கோரியுள்ளதாக வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த ஆட்சியில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் தூய்மைப் பணிகள் தனியார் மயமாக்கப்பட்டபோது, அதனை கடுமையாக எதிர்த்ததோடு, அதற்கு எதிராகப் போராடிய ஏழை தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது தற்போதைய ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகம். ஆனால், இன்று ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, தூய்மைப் பணியை தனியார்மயமாக்குவது ஏற்புடையதல்ல.

இத்தனை காலம் தற்காலிகப் பணியாளர்களாக இருந்து, பணி நிரந்தரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஏழைப் பணியாளர்களின் எதிர்காலம் ஒட்டுமொத்தமாக இருண்டுவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சிகளின் தன்னாட்சி அதிகாரத்தையும், தூய்மைப் பணியாளர்களின் வாழ்வுரிமையையும் சிதைக்கும் இந்த டெண்டர் அறிவிப்பை தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தனியார்மயமாக்கல் சாத்தியக்கூறு அறிக்கையைக் கைவிட்டு, தூய்மைப் பணியாளர்களை அரசுப் பணியாளர்களாக அங்கீகரித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: