நந்தனம் மெட்ரோ அருகே மேம்பாலத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் சிக்கி விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிரைவர்

சென்னை: சென்னை அண்ணாசாலையில் உயர் மட்ட மேம்பாலப்பணிகள் நடந்து வருகிறது. நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் முதல் சைதாப்பேட்டை வரை மேம்பாலம் பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதற்கிடையே திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த கால் டாக்சி டாக்சி ஓட்டி வரும் இப்ராஹிம்(30) என்பவர், தனது காரில் நேற்று அண்ணாசாலை வழியாக சென்று கொண்டிருந்தார். நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் அருகே செல்லும் போது பின்னால் வேகமாக கார் வந்ததால், இப்ராஜிம் தனது கார் மீது மோதாமல் இருக்க காரை வலது புறம் திருப்பிய போது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தடுப்புகளை மோதியபடி விபத்துக்குள்ளானது. தடுப்புக்கள் மோதியதால் கார் முழுவதுமான பள்ளத்திற்குள் விழாமல் அந்தரத்தில் தொங்கிய நிலையில் நின்றது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக கார் டிரைவர் இப்ராஹிம் காயங்களின்றி உயிர்தப்பினார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் மீட்பு படையினர் உதவியுடன் அந்தரத்தில் சிக்கிய கார் டிரைவர் இப்ராஹிமை பத்திரமாக மீட்டனர். பின்னர் விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: