தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கினை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் இன்று (21.06.2026) நேரில் பார்வையிட்டு, நெல் மூட்டைகள் பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது மற்றும் தாழ்வான பகுதிகளில் மண் கொட்டி சமன் செய்யும் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் திறந்தவெளி நெல் சேமிப்பு மையத்தில் வேளாண்மைத் துறை அமைச்சர் இன்று ஆய்வு மேற்கொண்டு, மழைக்காலத்தை முன்னிட்டு நெல் இருப்புகளை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டார்.
பட்டீஸ்வரம் திறந்த வெளி நெல் சேமிப்பு மையத்தில் மொத்தம் 215 நெல் அட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அட்டியிலும் 115 மெட்ரிக் டன் வீதம் மொத்தம் 24,725 மெட்ரிக் டன் நெல் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இது சுமார் 6,18,125 நெல் மூட்டைகளுக்கு சமமாகும்.
சேமித்து வைக்கப்பட்டுள்ள அனைத்து நெல் அட்டிகளும் தார்ப்பாய்களால் முழுமையாக மூடப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. மேலும், கிழிந்த அல்லது சேதமடைந்த தார்ப்பாய்களை உடனடியாக மாற்றுவதற்காக 85 தார்ப்பாய்கள் கூடுதலாக இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மழைநீர் தேங்காத வகையில் தாழ்வான பகுதிகளில் ஐந்து லோடு மண் கொட்டி தரை சமப்படுத்தப்பட்டுள்ளதுடன், போதிய வடிகால் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நெல் மூட்டைகள் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டுள்ளதையும், மழைநீர் தேங்காமல் வடிகால் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதையும், இருப்பு பாதுகாப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளும் முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளதையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மழைக்காலங்களில் நெல் இருப்புகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தஞ்சாவூர் மண்டலத்தில் தற்போது 12 திறந்தவெளி சேமிப்பு மையங்களில் 1,63,000 மெட்ரிக் டன் நெல்லும், 28 மூடப்பட்ட கிடங்குகளில் 1,37,000 மெட்ரிக் டன் நெல்லும் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 3,00,000 மெட்ரிக் டன் நெல் இருப்பு உள்ளது.
இதில் திறந்தவெளி சேமிப்பு மையங்களில் 54.33 சதவீதமும், மூடப்பட்ட கிடங்குகளில் 45.67 சதவீதமும் நெல் இருப்பு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ள அனைத்து நெல் மணிகளும் மழையின் காரணமாக எவ்வித சேதமும் அடையாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் தெரிவித்தார்கள்.
இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தஞ்சாவூர் முதுநிலை மண்டல மேலாளர் செல்வம், துணை மேலாளர்கள் மெய்கண்டமூர்த்தி, இளங்கோவன், உதவி மேலாளர் (தரக்கட்டுப்பாடு) முருகேசன், கும்பகோணம் வட்டாட்சியர் பூங்கொடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
