சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று நடந்த ஆனி திருமஞ்சன தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா கடந்த ஜூன் 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடந்தது.
முன்னதாக கோயிலின் மூலவரான சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி சித்சபையில் இருந்து அதிகாலை 5.30 மணியளவில் புறப்பாடாகி உள்பிரகாரத்தில் வலம் வந்தனர். அதனைத் தொடர்ந்து தேவ சபையில் சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. பின்னர், கீழ ரத வீதியில் அலங்கரிக்கப்பட்ட 5 தேர்களில் மேளதாளம் முழங்க, வேத மந்திரங்கள், தேவாரம், திருவாசகம் ஓதிட நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர்.
அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சிவபக்தர்கள் பங்கேற்று “ஓம் நமச்சிவாயா”, “ஓம் நமச்சிவாயா” என கோஷம் எழுப்பியவாறு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேருக்கு முன்னால் கோயில் யானை சென்றது. கைலாய வாத்தியங்கள், நாதஸ்வரம், செண்டை மேளம், தாரை, தப்பட்டைகள் முழங்க தேர் வலம் வந்தது. சிறுவர்கள் கோலாட்டம், சிறுவர் சிறுமியர் பங்கேற்ற பரதநாட்டியம் மற்றும் சிவன், பார்வதி வேடமிட்ட பக்தர்களும் நடனமாடினர். தேரோடும் வீதிகளில் பெண்கள் வண்ணவண்ண கோலமிட்டும், கும்மியடித்தும் தேரை வரவேற்றனர். கீழ வீதியில் இருந்து புறப்பட்ட தேர் தெற்கு வீதி, மேல வீதி வழியாக கஞ்சித் தொட்டி வந்தடைந்ததும், அங்கு மீனவர்கள் சார்பில் சிறப்பு மண்டகபடி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேர் மீண்டும் வடக்கு வீதி வழியாக தேர் நிலையை அடைந்தது.
தேர் திருவிழாவையொட்டி இன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும், நாளை அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை மகாபிஷேகமும், காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா நடக்கிறது. அதன்பின்னர், பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடக்கிறது. 23ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதியுலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது.
