அறிவியலாளர், கல்வியாளர் படங்களை மாட்டினாலே போதும் பள்ளிகளில் விஜய் படத்தை மாட்டவேண்டாம்: அமைச்சர் ராஜ்மோகன் அறிவுரை

சென்னை: சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் தனியார் மாற்றுத்திறனாளிகள் பள்ளியின் சார்பில் நடந்த பட்டயச் சான்றிதழ்கள் வழங்கும் விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டு, சான்றிதழ்களை வழங்கினார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;
தமிழகத்தில் எந்த பள்ளியிலும் மாதவிடாய் சார்ந்து மாணவிகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த அழுத்தமும் தரக்கூடாது. அவர்களுக்கு உகந்த ஒரு சூழலை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும். பள்ளிக்கூடங்களில் அறிவியலாளர்கள், கல்வியாளர்களின் படங்களைத்தான் மாட்டவேண்டும். அப்போதுதான் முதல்வர் மகிழ்வார். கல்வி நிறுவனங்களில் அரசியல் தலைவர்களின் படத்தை மாட்டவேண்டாம். பள்ளிகளில் மாணவர்களை வைத்து கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய வைப்பதைச் சகித்துக்கொள்ள முடியாது. அப்படி நடத்தினால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

எந்த பிரச்னைக்கும் உயிரை மாய்த்துக்கொள்வது சரியானது இல்லை. அந்த பிரச்னை இல்லாமல் செய்ய விழிப்புணர்வு அதிகமாக தேவைப்படுகிறது. அதற்கான திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். குழந்தைகளை கஷ்டப்படுத்தும் எந்த தேர்வும் கூடாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடும். இப்போது தேர்வுகள் நடந்து வருவதால், குழந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்க அரசியல் மற்றும் சட்ட ரீதியாக அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறோம்.

சட்டப்பேரவையில் நேரலை செய்யப்படுகிறது என்ற நம்பிக்கையில்தான் நான் பேசிக்கொண்டு இருந்தேன். நான் கழிவறைக்குச் செல்ல வெளியே வரும்போதுதன் என்னிடம் காவலாளிகள் நேரலை துண்டிக்கப்பட்டதைச் சொன்னார்கள். சட்டமன்ற நிகழ்வுகள் நேரலை செய்யப்பட வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு. சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் பேசி மீதம் உள்ள நாள்களில் நேரலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் யாரையும் அடிக்கப் போகவில்லை. அவர் பின் வரிசையில் இருந்ததால் எழுந்து பார்த்தார், அவ்வளவுதான். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: