தூங்கா நகரம் என்று மதுரை அழைக்கப்படுகிறது. நள்ளிரவிலும் சந்தடி மிகுந்த சாலைப் போக்குவரத்து இருப்பதால் மட்டுமல்ல; ஆன்மிக ரீதியாகவும் காரணம் இருக்கிறது. ஆமாம், அங்கே அருளாட்சி புரியும் மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் மேற்கொள்ளப்படும் திருவிழாக்கள்தான் காரணம்!
அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ராஜமாதங்கி சியாமள சக்தி பீடம் ஆகும். மீனாட்சி அம்மன் அங்கயற்கண்ணி என்று இலக்கிய எழிலோடு போற்றப்படுகிறாள். தன் முட்டைகளை விழியால் பார்த்தே, அவை பொரிக்கப்பட்டு, அவற்றிலிருந்து வெளிவரும் தன் குஞ்சுகளையும் பராமரிக்கும் இயல்புடையது தாய் மீன். அதேபோல தன் கருணைக் கண்களால், பக்தர்களின் பாவ மூட்டைகளை உடைத்தெறிந்து, அவர்களைப் புனிதர்களாக மாற்றுகிறாள் மீனாட்சி அம்மன்.
மீனுக்கு இமை கிடையாது; ஆகவே அது எப்போதும் விழித்திருக்கும். இந்த இயல்பாலும், அன்னை மீனாட்சி இரவு, பகல் எந்நேரமும் தன் பக்தர்களை அரவணைத்துக் காக்கிறாள். (‘உன்மேஷ நிமிஷோத்பன்ன விபன்ன புவனாவலி’ என்று அம்பிகையைத் துதிக்கிறது, ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்.) ‘மதுரை உறங்கா நகரம்’ என்றதற்கு அன்னையின் விழித்திருந்து காக்கும் இந்த அருளையும் முக்கியமான காரணமாகச் சொல்லலாம் அல்லவா?
பச்சைத் தேவி, மரகதவல்லி, தடாதகை, அபிடேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்கவல்லி, மும்முலைத் திருவழுமகள் முதலான பெயர்களால் அன்னை வழிபடப்படுகிறாள். மீனாட்சி அம்மன் இந்தத் தலத்தில் எழுந்தருளியிருப்பதில் தனிச் சிறப்பு இருக்கிறது. மானுடப் பெண்ணாகத் தோன்றி, பிறகு இறைவன் அருளால் இறைவியாக மாறிய அற்புத ஆன்மிக சம்பவம் அது.
பாண்டிய மன்னனான மலையத்வஜன், தன் வம்சம் தழைக்கவும், அரச பரிபாலனம் சிறக்க வாரிசு வேண்டியும் யாகம் மேற்கொண்டான். அவனுடைய மனைவி காஞ்சனமாலைக்கு அவனைவிட குழந்தை ஏக்கம் அதிகமாக இருந்தது. பெண்ணல்லவா, அவளுடைய பெண்மை பூர்த்தியடைவது தாய்மையில்தானே! அவர்களுடைய வேண்டுதலைக் கருணையுடன் செவிமடுத்தார் பரமேஸ்வரன்; புத்திரி பாக்கியம் நல்கினார். ஆமாம், யாகத்தின் பலனாக அரச தம்பதிக்கு அழகான ஒரு பெண் குழந்தை வாரிசாக அவதரித்தது.
இந்தப் பேறு குறித்து பெரிதும் மகிழ்ந்த பெற்றோர், குழந்தையின் உடலமைப்பு இயற்கைக்கு மாறாக விளங்கியது கண்டு பெரிதும் அதிர்ச்சியுற்றார்கள். ஆமாம், அந்தப் பெண் குழந்தை மூன்று ஸ்தனங்களைக் கொண்டிருந்தது. இயற்கையின் முரண் போலவே தோன்றினாலும், ஏற்றுக்கொள்ள வேண்டிய இறைவனின் கொடை, அது. அதாவது, இந்தக் குழந்தை சாமானிய மானுடச் செல்வம் அல்ல; இறை பொக்கிஷம். இறைவனே ஆட்கொள்ளப் போகும் அற்புதம், என்று அமானுஷ்ய வாக்கால் (அசரீரி) அவர்கள் தெரிந்து கொண்டார்கள்.
அதாவது, முக்கண்களைக் கொண்ட ஈசனைப் போல, இந்தப் பெண் குழந்தை மூன்று ஸ்தனங்களைக் கொண்டிருந்தது. இதுவும் சிவ அடையாளமே என்று தெளிந்தார்கள் பெற்றோர்கள். சிவபெருமானின் மூன்றாவது கண் அவருடைய நெற்றியின் நடுவே அமைந்துள்ளது. அது ஞானக் கண். ஆனால், ‘நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே’ என்று நக்கீரர் வாதிட்டதுபோல அந்தக் கண் நெருப்பை உமிழக் கூடியதாயிற்றே! ஆனால், அது நக்கீரரின் பெருமையை உலகுக்கு வெளிக்காட்ட ஐயன் விளையாடிய திருவிளையாட்டுதானே! அதே கண்களிலிருந்து தெறித்த ஆறு பொறிகள்தானே ஆறுமுகனைத் தோற்றுவித்தது!
அதேபோல தன் தியானத்தைக் கலைத்து தனக்கு மோகமூட்ட முனைந்த மன்மதனை எரித்ததும் அந்த நெற்றிக் கண்தானே! இதன் மூலம் சிற்றின்பம் என்பது கொடிய நோய் என்பதை ஈசன் உணர்த்தினாரே! திரிபுர அசுரர்களையும் அதே நெற்றிக்கண் தீப்பிழம்பால் எரித்து அகம்பாவமும், ஆணவமும் யாருக்கும் ஆகாது என்பதை அறிவுறுத்தியவராயிற்றே! கூடவே, மறைபொருளாக, மனிதர்களுக்கும் ஞானக் கண் அவர்களுடைய நெற்றி நடுவே இருக்கிறது, ஆனால், அவர்கள்தான் அதை உணரவில்லை என்பதையும் நமக்குச் சுட்டிக் காட்டுகிறாரே! இதைத்தானே தியானப் பயிற்சி மேற்கொள்ளும்போது, புருவ மத்தியில் சக்தியை ஒன்று கூட்டுமாறு சொல்லிக் கொடுக்கிறார்கள்!
ஆகவே, இத்தகைய ஈசனின் அம்சமாக, அவரது நெற்றிக் கண் அமைந்திருப்பதுபோல தடாதகையும் மூன்றாவது ஸ்தனத்தைப் பெற்றிருந்தாள் என்பதை அறிந்து பெற்றோர் நிம்மதியடைந்தார்கள். அவள் தெய்வக் குழந்தை, இந்த பாண்டிய நாடு மட்டுமல்ல, அகில உலகத்தையும் ரட்சிக்கப் போகும் அம்பிகை என்பதையும் புரிந்து கொண்டார்கள். குழந்தைக்கு ‘தடாதகை’ என்று பெயர் சூட்டினார்கள். அதாவது, தடாகம் போன்று குளிர்ந்தவள். அதிலே வாழும் தாய் மீன் தன் முட்டைகளையும், குஞ்சுகளையும் காப்பது போன்ற கருணை உள்ளவள். இத்தகையவள்தானே நாடாளுவதற்கு மிகவும் ஏற்றவள்!
பெண் குழந்தையே ஆனாலும், ராஜ பாரம்பரியம் என்பதால், நாளடைவில் போர் உட்பட அனைத்துக் கலைகளிலும் தேர்ச்சி அடைந்தாள், தடாதகை. வாள்வீச்சு, குதிரையேற்றம், படை நடத்துதல், போர் உத்திகள் என்று பலவற்றையும் அவள் கற்றுத் தேர்ந்தாள். அரச இயல்பு படி, தன் போர் ஆற்றலால் உலகெங்கும் அருளாதிக்கம் செலுத்த வேண்டும் என்று விரும்பினாள். அதன்படி திக்விஜயம் செய்து பூவுலகை அடிமை கொண்ட அவள், கயிலாயத்தையும் முற்றுகையிட்டாள். ஏற்கெனவே கேட்ட அசரீரி வாக்குபோல சிவபெருமானைக் கண்டதும் அவள் நாணம் கொண்டாள், அந்தக் கணமே அவளுடைய மூன்றாவது ஸ்தனம் அவளிடமிருந்து மறைந்து ஈசனோடு ஐக்கியமானது.
ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள், கண்ணனோடு ஒன்றிணைந்ததுபோல தடாதகை என்ற மீனாட்சியும் கயிலைநாதனுடன் இரண்டறக் கலந்தாள்.அந்த தெய்வீகத் திருமணமே, இன்றளவும் மதுரையில் சித்திரைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. கள்ளழகராகிய மஹாவிஷ்ணு, தன் அழகர் மலையிலிருந்து புறப்பட்டு, வைகை ஆற்றைக் கடந்து வந்து இந்தத் திருமண வைபவத்தில் கலந்து கொள்ள முயற்சிப்பதாகிய சம்பவமும் நடத்திக் காட்டப்படுகிறது.
இப்படி, தன்னை சொக்க வைத்த ஈசனைத் திருமணம் புரிந்து கொண்டு, அவரை சொக்கநாதராக மாற்றி, அவருடனேயே மதுரையில் கோயில் கொண்டிருக்கிறாள் மீனாட்சி. ‘துன்பம் தீர்வது பெண்மையினாலடா!’ என்று மகாகவி பாரதி சொன்னதைப் போல பக்தர்களின் எல்லாவகை துயரத்துக்கும் அன்னை தீர்வு அருள்கிறாள். அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல இந்தக் கோயிலில் அம்பிகையின் ஆட்சிதான். ஆமாம், இங்கே எல்லா ஆராதனைகளும் முதலில் அம்மனுக்குதான், பிறகுதான் ஐயன் சொக்கநாதனுக்கு! கோயிலுக்கு வரும் பக்தர்களும் முதலில் மீனாட்சி அம்மனை தரிசித்த பிறகுதான் சொக்கநாதரை தரிசிக்கச் செல்கிறார்கள்.
இந்த மரபு இன்றளவும் இக்கோயிலில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுவாக வேடிக்கையாகக் கேட்பார்கள், ‘‘என்னப்பா உன் வீட்டிலே சிதம்பர ஆட்சியா அல்லது மதுரையா?’’ என்று! அதாவது, ‘சிதம்பர’ ஆட்சி என்றால் கணவருக்கு முக்கியத்துவம்; ‘மதுரை’ என்றால் மனைவிக்கு முக்கியத்துவம்! இதை நிரூபிப்பது போல, பொதுவாகவே ‘மீனாட்சி அம்மன் கோயில்’ என்றுதான் இந்தக் கோயில் அடையாளம் காணப்படுகிறதே தவிர, ‘சொக்கநாதர் கோயில்’ என்றல்ல! இந்தக் கோயிலில் குறிப்பிடத்தக்க அம்சம், அம்பிகை ஒவ்வொரு நாளும் எட்டுவகை சக்திகளாக வழிபடப்படுவதுதான்.
அதிகாலை சூரிய உதய நேரத்தில் (இதை ப்ராத சந்தி என்று குறிப்பிடுகிறார்கள்) ‘பாலா’வாகக் காட்சியளிக்கிறாள்; காலை சுமார் 8.30 முதல் 9.15 வரை (6 முதல் 8 நாழிகை நேரம்) புவனேஸ்வரியாகத் திகழ்கிறாள்; முற்பகல் சுமார் 10.45 முதல் 12 மணி வரை (12 முதல் 15 நாழிகை வரை) கௌரி என்ற திருக்கோலம்; நண்பகலில் சியாமளா; மாலையில் மாதங்கி; அர்த்த ஜாமத்தில் (இரவு 10 முதல் 12 மணி வரை) பஞ்சதசி; பள்ளியறைக்குப் போகையில் ஷோடசி என்று எட்டு சக்திகளாகத் திகழ்கிறாள்.
இந்த ஒவ்வொரு தோற்றத்தின் போதும் அந்தந்த கோலத்திற்கு ஏற்ப அம்மன் அலங்கரிக்கப்படுகிறாள். காலை நேரங்களில் பாவாடை- சட்டை அணிந்த பாலா மற்றும் புவனேஸ்வரியாக; நண்பகலில் மடிசார் புடவை அணிந்து சியாமளாவாக; மாலை வேளையில் தங்கக் கவசம், வைரக் கிரீடம் அணிந்த மாதங்கியாக; அர்த்த ஜாமத்தில் வெண்பட்டுப் புடவை அணிந்த பஞ்சதசியாக அம்பிகை காட்சியளிப்பதைக் காண கண் கோடிதான் வேண்டும்.
பொதுவாக மீனாட்சி அம்மன் பச்சை வண்ண மேனியளாகக் காட்சியளிக்கிறாள். ‘பச்சைப் புடவைக்காரி’ என்றே பக்தர்கள் அழைத்துப் பரவசப்படுகிறார்கள். அம்பிகையின் வலது தோளில் பச்சைக் கிளி ஒன்றும் அமர்ந்திருக்கிறது. உலகையே காத்தருளும் பெரும் பொறுப்பு வகிக்கும் அன்னை, எங்கே பக்தர்கள் விடுக்கும் கோரிக்கைகளை மறந்து விடுவாளோ என்ற அச்சத்தில், அவள் தோள் மீதமர்ந்து அந்தக் கோரிக்கைகளை பக்தர்கள் சார்பில் தான் தெரிவித்து அன்னைக்கு அடிக்கடி நினைவூட்டிக் கொண்டிருக்கிறதாம் அந்தக் கிளி! இதே போன்ற ஒரு கிளியை ஆண்டாளும் தன் இடது கரத்தில் அமர வைத்திருக்கிறாள்.
ஆனால், ஆண்டாளின் கிளி, பரந்தாமனிடம் அவளுடைய காதலைச் சொல்ல, தூதாக அனுப்பப்பட்டது! இந்தக் கோயிலைப் பற்றி, குறிப்பாக மீனாட்சி அம்மனைப் பற்றி, சங்க இலக்கியங்கள் நிறைய பேசுகின்றன. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல தமிழ் நூல்களில் இந்தக் கோயில் பற்றிய விவரங்கள் காணப்படுகின்றன. இந்த அம்மன் சிலை சுயம்புவாகத் தோன்றியதாக அந்தத் தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. மலையத்துவஜனின் முன்னோரான உக்ரபாண்டியனுக்கு மதுரை மன்னனாக முடிசூட்டிய அம்பிகை, கோயிலில் சொக்கநாதருக்கு அருகே விக்ரகமாக நிலைத்துவிட்டாள் என்றும், பின்னாளில் மலையத்துவஜன் இயற்றிய யாகத்தில் அக்னியிலிருந்து அவதரித்தாள் என்றும் சொல்லப்படுகிறது.
புராதனப் பெருமை மிக்க மீனாட்சி அம்மன் கோயில், 14ம் நூற்றாண்டு வாக்கில் இஸ்லாமியர்களால் சிதைக்கப்பட்டது. ஆனால், 16 -17ம் நூற்றாண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டது. இவர்கள் முயற்சியால் 14 கோபுரங்கள் மற்றும் ஆயிரங்கால் மண்டபத்துடன் இன்றும் பிரமாண்டமாக விளங்குகிறது இந்தத் திருக்கோயில். வழக்கமாக பிற கோயில்களில் நடராஜர் இடது பாதம் தூக்கி ஆடும் நிலையில்தான் காட்சியளிப்பார்.
ஆனால், வலது பாதம் தூக்கி ஆடும் நடராஜர் இந்தக் கோயிலின் புதுமைப் படைப்பாகும். இதற்கும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் உண்டு. பாண்டிய மன்னன் ராஜேந்திரன், தினமும் நடராஜப் பெருமான் இடது பாதம் தூக்கி ஆடும் நிலையிலேயே இருப்பது கண்டு மனம் வருந்தினான். அவருடைய வலது பாதம் வலிக்காதா என்று ஆதங்கப்பட்டான்; அவரையே மனமுருகி விரும்பிக் கேட்டுக் கொண்டான்.
அவனது பக்தியை மெச்சும் வகையில் நடராஜர், இடது காலை இறக்கி, வலது பாதம் தூக்கி ஆடினாராம். இந்த அற்புதக் காட்சியை இன்றும் ‘சந்தியா தாண்டவம்’ என்ற பெயரில் இக்கோயிலின் வெள்ளியம்பலத்தில் தரிசிக்கலாம். இதே போன்று பொற்றாமரைக் குளம், ஈசனின் திருவிளையாடல்களுக்கு ஆதாரபூர்வமான சாட்சியாகத் திகழ்கிறது. இக்கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் அமைந்துள்ள அருங்காட்சியகம், கோயிலில் பழமையையும், பெருமையையும் சுவடிகளாகவும், ஓவியங்களாகவும், சிற்பங்களாகவும், புகைப்படங்களாகவும் நமக்குத் தெள்ளென எடுத்துரைக்கின்றன.
இவ்வாறு நம் அறிவுக்கும் அருள் வழங்கும் அன்னை மீனாட்சி, பொதுவாக, பக்தர்களின் திருமணத் தடை நீங்கவும், மழலைப் பேறு கிட்டவும், கல்வியில் சான்றோராகவும், உயர் பதவிகளை அடையவும், குடும்ப ஒற்றுமை ஓங்கவும், தொழில் மற்றும் வியாபாரம் மேன்மேலும் வளர்ந்து சிறப்புப் பெறவும், தீராத நோய்கள் விலகவும் பேரருள் புரிகிறாள்.
ப்ரபுசங்கர்
