ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் நடைபெற்ற புஷ்பா-2 பட சிறப்பு காட்சியின் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சம்மன் வழங்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புஷ்பா-2 பட சிறப்பு காட்சியின் போது குவிந்த கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். முன்னறிவிப்பின்றி நடிகர் அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வந்ததே இந்த நெரிசலுக்குக் காரணம் என வழக்கு தொடரப்பட்டது.
சிக்கட்பள்ளி காவல்நிலையத்தில் திரையரங்கு நிர்வாகம் (குற்றவாளிகள் 1-10) மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் (குற்றவாளி எண் 11) உட்பட 23 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 105 மற்றும் 118(1)-ன் கீழ் வழக்குகள் பதியப்பட்டது. அதை தொடர்ந்து பல கட்டமாக விசாரணை நடைபெற்றது. தற்போது இந்த வழக்கில் நடிகர் அல்லு அர்ஜூன் வரும் ஜூன் 22ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று நம்பள்ளி நீதிமன்றம் சம்மன் வழங்கியுள்ளது.
முன்னதாக அல்லு அர்ஜுன் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, 14 நாள் சிறையில் இருந்து பின்னர் தெலங்கானா உயர் நீதிமன்றத்தால் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 23 பேரிடம் விசாரணையானது நடைபெற்றது. தற்போது நடிகர் அல்லு அர்ஜூனிடம் அடுத்தகட்ட விசாரணையானது நடைபெறவுள்ளது.
