புதுடெல்லி: நாடு முழுவதும் நாளை மறுநாள் நீட் மறுதேர்வு நடைபெற உள்ள நிலையில் அதற்கான தயார் நிலை குறித்து அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
மருத்துவபடிப்பில் சேருவதற்கான நீட் யூஜி தேர்வு இந்த ஆண்டு மே 3ம் தேதி நடைபெற்றது. வினாத்தாள் வெளியானதால் தேர்வு ரத்து செய்ப்பட்டு மறுதேர்வு நாளை மறுநாள் நாடு முழுவதும் நடைபெறுகின்றது. மறுதேர்வை முன்னிட்டு தயார் நிலையை மதிப்பீடு செய்வதற்காக ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று ஆய்வு கூட்டத்தை நடத்தினார். ஒன்றிய கல்வி அமைச்சகம், மாநில அரசுகள், தேசிய தேர்வு முகமை மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளுடன் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேர்வு செயல்முறையில் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் மிக உயர்ந்த தர நிலைகளை பராமரிப்பதின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும் மறுதேர்வை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்துவதற்கு தேவையான விழிப்புணர்வுடன் இருக்குமாறும் முழுமையாக தயாராக இருக்குமாறும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அமைச்சர் உத்தரவிட்டார்.
வதந்திகளை நம்ப வேண்டாம்
தேசிய தேர்வு முகமையானது தனது எக்ஸ் தள பதிவில், ”மறு தேர்வு திட்டமிட்டபடி ஞாயிறன்று நடைபெறும். மேலும் தேர்வு ஒத்திவைப்பு குறித்த வதந்திகளையோ அல்லது சமூக ஊடகங்களில் பரவும் தேவையற்ற தகவல்களையோ நம்பி கவனத்தை திசைத்திருப்ப வேண்டாம். தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்களை மட்டுமே நம்புங்கள். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குஜராத்தில் மேலும் ஒரு மாணவர் பலி
குஜராத்தில் நீட் மறுதேர்வு அச்சம் காரணமாக 17 வயது மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ட்ராகட் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 17 வயது சிறுவன், தன் தாய், தம்பியுடன் வசித்து வந்தான். இந்த சிறுவன் கடந்த 3ம் தேதி நடந்த நீட் தேர்வை நல்ல முறையில் எழுதியிருந்த நிலையில், தற்போது மறுதேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தான். நேற்று அதிகாலை 2.55 மணிக்கு ஆறாவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
