வாஷிங்டன்: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தத்தில் அதிபர் டிரம்ப், ஈரான் அதிபர் பெஷஷ்கியான் கையெழுத்திட்டனர்.இந்த ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து மேற்காசிய போர் முடிவுக்கு வருகிறது.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. அமெரிக்காவுடனான மோதலை தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. அதேவேளையில், ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முடக்கியது. இதனால் ஈரானுக்கு சரக்கு, கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்வது கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையே அமெரிக்கா- ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து அமைதி பேச்சுவார்த்தையும் நடந்தது.
இந்நிலையில், அமெரிக்கா- ஈரான் இடையிலான 14 அம்சங்கள் கொண்ட அமைதி ஒப்பந்தம் நேற்று முன்தினம் கையெழுத்தாகி உள்ளது. அந்த ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டனர். இதன் மூலம் இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்பட்டது. இதுபற்றி வெள்ளை மாளிகை தனது எக்ஸ் வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் ஆகியோர், இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முறைப்படி கையெழுத்திட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து ஈரான் மறுகட்டமைப்புக்கு ரூ.28 லட்சம் கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்பது உட்பட 14 அம்ச அறிக்கையை அமெரிக்க அரசு வெளியிட்டது.
வெர்சாய்ஸ் அரண்மனையில் நேற்று முன்தினம் இரவு நடந்த இரவு விருந்தின்போது அமெரிக்க-ஈரான் ஒப்பந்தத்தின் அசல் பிரதியிலும் டிரம்ப், அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டுள்ளார். மேலும், இரவு விருந்து மேசையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் இருந்த கையெழுத்திடும் நிகழ்வின் காணொளியை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க மற்றும் ஈரான் அதிகாரிகளின் கூற்றுப்படி, ‘இந்த ஆவணம் முதலில் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் ஈரானின் தலைமை பேச்சுவார்த்தையாளர் முகமது பாகர் கலிபாப் ஆகியோரால் டிஜிட்டல் முறையில் கையெழுத்திடப்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் இரு அதிபர்களாலும் டிஜிட்டல் முறையில் நிறைவேற்றப்பட்டது. இந்த ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வந்தது. இதன்மூலம், சுவிட்சர்லாந்தில் இன்று முறைப்படி கையெழுத்திடும் விழா நடத்தப்படுமா என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. இதன் மூலம் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக அமெரிக்கா-ஈரான் இடையே நிலவி வந்த மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம், பாகிஸ்தான், கத்தார் உள்ளிட்ட நாடுகளின் முயற்சியால் எட்டப்பட்டுள்ளது.
அமைதி ஒப்பந்தப்படி இரு நாடுகளும் மோதலை நிரந்தரமாக கைவிட வேண்டும், ஈரான் துறைமுகங்களை முடக்கியுள்ள அமெரிக்க படைகள் உடனடியாக திரும்ப பெறப்பட வேண்டும், ஹார்முஸ் நீரிணையை ஈரான் திறக்க வேண்டும், இது கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வர வழிவகுக்கும், இந்த ஒப்பந்தப்படி, அனைத்து தரப்பும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான 60 நாட்களில் ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் அனைத்தும் இரு தரப்பும் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லெபனானில் ஹிஸ்புல்லா ஆயுதக்குழு மீதான தாக்குதலையும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் எனவும் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானுடனான ஒப்பந்தத்தின்படி, தெஹ்ரான் தனது அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பைக் குறைக்க வேண்டும். அந்நாட்டின் மீதான தடைகள் தளர்த்தப்பட்டு, வாஷிங்டனின் ஒரு முக்கிய சலுகையாக ஈரான் தனது கச்சா எண்ணெயை உடனடியாகத் தாராளமாக விற்க அனுமதிக்க அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் அந்நாட்டு அரசு செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், இரு நாட்டு அதிபர்களின் கையெழுத்துக்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த ஒப்பந்தத்தின்படி செயல்படுவதை சோதித்து பார்க்கும் நேரம் வந்துவிட்டது என்றார். இந்நிலையில், இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு ஐநா அமைப்பு, மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல்வேறு தரப்பும் வரவேற்பு தெரிவித்துள்ளது. அங்கு, இனி அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஈரான் மீதான பொருளாதார தடைகளை நீக்க தயாராக இருப்பதாக தெரிவித்து பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டிருந்தன.
இரு நாடுகளுக்கு இடையில் அமைதி திரும்பியிருந்தாலும், ஏற்கனவே ஏற்பட்ட எரிபொருள் விநியோக சங்கிலி பாதிப்பு சரியாக குறைந்தது ஓராண்டு வரை ஆகும் என தெரிகிறது. அதுவரை எரிபொருள் விலை குறைய வாய்ப்பு இல்லை என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஈரானுக்கு ரூ.28 லட்சம் கோடி
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான ஒப்பந்தத்தின்படி, ஈரான் பொருளாதாரத்தை மீட்டெடுக்க 300 பில்லியன் டாலர்(ரூ. 28 லட்சம் கோடி) மதிப்பிலான முதலீட்டு நிதி உருவாக்கப்படவுள்ளது. இது அமெரிக்க அரசாங்கத்தின் நிதி அல்ல, அமெரிக்கா, வளைகுடா நாடுகள் மற்றும் பிற பன்னாட்டு நிறுவனங்களால் திரட்டப்படும் தனியார் முதலீடாகும்.
டிரம்ப் எச்சரிக்கை
நிபந்தனைகளை ஈரான் பூர்த்தி செய்யப்படாவிட்டால் ஒப்பந்தம் முறியக்கூடும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இடைக்கால ஒப்பந்தம் அந்த இலக்குகள் அனைத்தையும் எட்டவில்லை, ஆனாலும் அதை தாம் வரவேற்பதாக கூறினார்.
அவர் கூறுகையில், அது என்னவென்று யாருக்கும் தெரியாது, ஆனால் அது மிகவும் சக்தி வாய்ந்தது என்று ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட டிரம்ப் கூறினார். ஆனால், அதைக் கைவிடுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் தான். இது எனக்குப் பிடிக்கவில்லை என்றால், நாம் மீண்டும் அவர்களை நோக்கிச் சுடுவதற்கும், குண்டுகளை வீசுவதற்கும் திரும்பிச் செல்வோம் என்றார்.
சுவிட்சர்லாந்தில் இன்று பேச்சு
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான முதல் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் இன்று சுவிட்சர்லந்தில் நடைபெறுகிறது. இரு நாடுகளும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுவிட்சர்லந்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான பூர்கன்ஸ்டாக்கில் சந்திப்பு நடைபெறுகிறது.பாகிஸ்தானும் கத்தாரும் சமரசத் தரப்பாக பங்கேற்கவுள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் சமையல் காஸ் வினியோகத்தில் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தி இன்று முதல் முழுமையாக திறக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். கடந்த 3 மாதங்களாக மூடிக்கிடந்த இந்த கடல்வழி பாதையில், போர் ஏற்படுவதற்கு முந்தைய நிலை விரைவில் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஈரான் மீதான எண்ணெய் வர்த்தத் தடைகளை நீக்க அமெரிக்கா ஒப்பு கொண்டுள்ளது. இதன் மூலம் ஈரான், தனது கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருட்களை எந்தவித கட்டுப்பாடும் இன்றி விற்கலாம்.
அமைதி ஒப்பந்தம் உடனடி அமல்
இந்த அமைதி ஒப்பந்தம் உடனடியாக அமலுக்கு வருகிறது என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார். ஷெபாஸ் ஷெரீப் எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஒரு அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் தற்போது நடைமுறைக்கு வந்துவிட்டது. லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் முடிவுக்குக் கொண்டுவருவதாக இரு தரப்பினரும் அறிவித்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
பதற்றமான இறுதி கட்டம்
பதற்றமான இறுதிக்கட்டத்திற்குப் பிறகு இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லாவின் இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ஈரான் மிரட்டல் விடுத்தது.அமெரிக்க பிரதிநிதிகள், கத்தார் மற்றும் பாகிஸ்தான் மத்தியஸ்தர்களுடன் இணைந்து, இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்துவதைத் தடுக்க முயற்சி மேற்கொண்டனர். தாக்குதல் நடந்திருந்தால், அது இஸ்ரேல் கடுமையான பதிலடியை கொடுத்து, ஒப்பந்தத்தையே நிலைகுலைய செய்திருக்கும். தெஹ்ரான் அதிகாரிகள் இறுதியில் தாக்குதலைத் தள்ளிப்போட்டனர்.
மோடிக்கு பின்னடைவு: காங். விமர்சனம்
ஈரான்-அமெரிக்கா இடையே ஒப்பந்தம் கையெழுத்தான விவகாரத்தில் ஒன்றிய அரசை காங்கிரஸ் சாடியுள்ளது. இது பிரதமரின் வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்பட்ட கடுமையான பின்னடைவு என கூறியுள்ளது.இது பற்றி காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிவிடுகையில், இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்’ என்று அழைக்கப்படும் இந்த அமைதி ஒப்பந்தம், பாகிஸ்தானின் புதிதாகப் பெற்ற பிராந்திய அந்தஸ்தையும் உலகளாவிய செல்வாக்கையும் காட்டுகிறது. இது பிரதமர் மோடியின் வெளியுறவு கொள்கைக்கு ஏற்பட்ட கடுமையான பின்னடைவாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அணு ஆயுத பேச்சு
இந்த ஒப்பந்தத்தின்படி, ஈரானின் அணு ஆயுதச் செறிவூட்டல் மற்றும் அதன் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்றுவது குறித்து, அமெரிக்காவும் ஈரானும் 60 நாள் காலக்கெடுவுக்குள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தடைகளைத் தளர்த்துவது மற்றும் முடக்கப்பட்ட ஈரானிய நிதிகளை விடுவிப்பது குறித்து அமெரிக்கா விவாதிக்கும். இந்தத் தளர்வுகள், தெஹ்ரான் அதற்குக் கட்டுப்படுவதைப் பொறுத்து அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானின் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் அளவைக் குறைப்பது எப்படி என்பது குறித்தும், அதன் அணுசக்தித் திட்டத்தை முடக்கி எதிர்காலத்தில் கண்காணிப்பது எப்படி என்பது குறித்தும் ஒரு தொழில்நுட்ப உடன்பாட்டை எட்டுவதற்கு இரு தரப்பினரும் 60 நாட்கள் அவகாசம் அளித்துள்ளனர். அணுசக்தி விவகாரத்தில் ஏற்படும் முன்னேற்றத்தைப் பொறுத்தே தடைகள் நீக்கப்படுவதும், முடக்கப்பட்ட நிதிகளைப் பெறுவதும் அமையும் என்பதால், ஈரான் ஒரு இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஊக்குவிக்கப்படுவதாக அமெரிக்கத் தரப்பு வலியுறுத்துகிறது.
பாக். உத்தரவாதம்: ஷெரீப்
மேற்கு ஆசியாவில் அமைதியை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான ஒப்பந்தத்திற்கு உத்தரவாதமாக, பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்று அவரது அலுவலகம் தெரிவித்தது. இந்த ஆவணத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் ஆகியோர் ஏற்கனவே கையெழுத்திட்டிருந்தனர்.
சுவிட்சர்லாந்தில் திட்டமிடப்பட்டிருந்த விழாவுக்கு முன்னதாக ஷெரீப் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அந்த விழாவில் அமெரிக்கா, ஈரான், பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் முக்கியப் பேச்சுவார்த்தையாளர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் இரு அரசாங்கங்களின் உயர்மட்ட அளவில் கையெழுத்திடப்பட்டதாகவும், மோதலுக்கு ராஜதந்திரத் தீர்வு காண்பதில் அவற்றின் உறுதிப்பாட்டைக் காட்டுவதாகவும் ஷெரீப் கூறினார். மேலும், இந்தச் செயல்முறைக்கு பங்களித்த சவுதி அரேபியா,கத்தார், துருக்கி மற்றும் எகிப்து உள்ளிட்ட மேற்கு ஆசிய நாடுகளுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
நிதி தொடர்பான முக்கிய விவரங்கள்
அமெரிக்க வரி செலுத்துவோரின் பணம் இதில் பயன்படுத்தப்பட மாட்டாது. அமெரிக்கா, வளைகுடா நாடுகள், ஆசியா மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த தனியார் முதலீட்டாளர்களின் நிதி மட்டுமே பயன்படுத்தப்படும். ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தைக் கைவிடுதல் மற்றும் நிபந்தனைகளை முறையாகப் பின்பற்றுதல் ஆகியவற்றுக்கு உட்பட்டு மட்டுமே இந்த நிதியை அணுக முடியும். ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின்படி இந்த நிதியைப் பெறுவது குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் சில நிபந்தனைகளைத் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க அதிபர், அமெரிக்க அரசு ஈரானுக்கு எந்த நிதியும் வழங்கவில்லை என்பதை கூறியுள்ளார்.
எண்ணெய் விலை குறையுமா?
ஹோர்முஸ் வழித்தடம் மீண்டும் திறக்கப்படுவதால் ஜூலை மாத இறுதிக்குள் வளைகுடா நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதி இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் முதலீட்டு வங்கி கணித்துள்ளது. எனினும், பல்வேறு நாடுகள் தங்களின் இருப்புக்களை நிரப்ப முயல்வதாலும், அமெரிக்காவில் நிலவும் பணவீக்கம் காரணமாக வட்டி விகிதங்கள் உயர்த்தப்படலாம் என்ற அச்சத்தாலும், எண்ணெய் விலைகள் மேலும் கிடுகிடுவென குறையாமல் ஓரளவுக்கு கட்டுக்குள்ளேயே இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா தெரிவித்தார்.
