- NCBI கட்சி
- திரிணாமுல்
- ககோலி கோஷ்
- புது தில்லி
- திரினாமுல் கட்சி
- ககோலி கோஷ் தஸ்திதார்
- திரிணாமூல் காங்கிரஸ்
- மேற்கு வங்காளப் பேரவை
- அக்காட்
புதுடெல்லி: திரிணாமுல் கட்சியின் அதிருப்தி எம்பிக்களை ஏற்பதற்கு என்சிபிஐ கட்சி தயாராக உள்ளது என்று ககோலி கோஷ் தஸ்திதார் எம்பி தெரிவித்தார். மேற்கு வங்க பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், அக்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.கட்சி எம்எல்ஏக்களில் 60 பேர் கட்சி தலைவர் மம்தா பானர்ஜியை எதிர்த்து தனியாக செயல்படுவதாக அறிவித்தனர். அதிருப்தி எம்எல்ஏக்களின் தலைவரான ரிதப்ரதா பானர்ஜியை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக சபாநாயகர் அங்கீகாரம் அளித்துள்ளார்.
எம்எல்ஏக்களின் பிளவையடுத்து மக்களவையிலும் ககோலி கோஷ் தஸ்திதார் தலைமையில் 20 எம்பிக்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். அவர்கள் ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவை சந்தித்து பேசினார். கடந்த ஞாயிறன்று, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை 20 எம்பிக்களும் சந்தித்து தங்களுக்கு தனி இருக்கை ஒதுக்கும் படி கோரிக்கை விடுத்தனர். இந்த 20 அதிருப்தி எம்பிக்களும் இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியுடன்(என்சிபிஐ) இணைவதாகவும். இந்த கட்சி தேஜ கூட்டணிக்கு ஆதரவுளிக்கும் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் அதிருப்தி எம்பி ககோலி கோஷ் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், திரிணாமுல் காங்கிரசில் உள்ள அதிருப்தி எம்பிக்கள் அனைவரையும் சேர்க்க என்சிபிஐ கட்சி தயாராக உள்ளது. இதன் மூலம் கட்சி எம்பிக்களின் பலம் 22 ஆக உயரும் என்று எதிர்பார்ப்பதாக கூறினார். மேற்கு வங்க திரிணாமுல் அதிருப்தி எம்எல்ஏக்களுடனான உறவு குறித்து கேட்ட போது திரிணாமுல் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கும் என்சிபிஐ கட்சி எம்பிக்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றார்.
ஒரே நாளில் பிரபலமான என்சிபிஐ
திரிணாமுல் எம்பிக்கள் 20 பேர் இணைந்துள்ளதால் என்சிபிஐ கட்சி ஒரே நாளில் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திரிபுராவில் பதிவு செய்யப்பட்டுள்ள அங்கீகரிக்கப்படாத கட்சியான என்சிபிஐயின் அலுவலகம் அவுராவில் உள்ளது. மேற்கு வங்கத்தில் அதிக எம்பிக்களை கொண்ட கட்சி என அந்த கட்சி இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
புதிய தலைவர் நியமனம்
திடீர் அரசியல் மாற்றங்களை தொடர்ந்து என்சிபிஐ கட்சியின் தலைவராக ஜோதி பிரகாஷ் சட்டர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார் என்று ககோலி கோஷ் தெரிவித்தார். ஆனால், ஜோதி பிரகாஷ் சட்டர்ஜி யாரென்று தனக்கே தெரியாது என்று என்சிபிஐ கட்சியின் பொது செயலாளர் சாந்தனு டே தெரிவித்தார்.
