×

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிதி ஆதாரம் என்ன..? மோகன் பகவத்துக்கு அமைச்சர் பிரியாங்க் கார்கே கடிதம்

பெங்களூரு: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சட்டரீதியான நிலை, அமைப்பு ரீதியான கட்டமைப்பு, நிதி ஆதாரங்கள் மற்றும் பொதுப் பொறுப்புடைமை ஆகியவை தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளிக்குமாறு அதன் தலைவர் மோகன் பகவத்திற்கு கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் பிரியாங்க கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் பிரியாங்க் கார்கே கூறியிருப்பதாவது:
ஆர்எஸ்எஸ், தனது சட்டப்பூர்வ நிலை, நிர்வாகிகள், வருவாய் ஆதாரங்கள், செலவுகள் மற்றும் சொத்துக்கள் குறித்த விவரங்கள், வரி செலுத்திய நிலை மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்காகப் பெறப்பட்ட அனுமதிகள் ஆகியவை குறித்த தகவல்களை வழங்க வேண்டும் என்பது இயல்பான மற்றும் நியாயமான எதிர்பார்ப்பாகும்.
எனவே பின்வரும் விவகாரங்கள் குறித்த தகவல்களை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  • அமைப்பின் சட்டபூர்வமான நிலை மற்றும் நிறுவன அமைப்பு.
  • நிர்வாகிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் குறித்த விவரங்கள்.
  • நன்கொடைகள், பங்களிப்புகள் மற்றும் பிற வருவாய் ஆதாரங்கள்.
  • செலவுகள் மற்றும் சொத்துக்கள் குறித்த விவரங்கள்.
  • பொருந்தக்கூடிய வரிகள் சட்டப்பூர்வமாகச் செலுத்தப்படுகின்றனவா என்பது குறித்த தகவல்.
  • அதிகாரப்பூர்வப் பதிவு இல்லாமலே செயல்பாடுகளை மேற்கொள்வதற்கான சட்டப்பூர்வ அடிப்படை.
  • பொதுப் பொறுப்புக்கூறல் இன்றி இவ்வளவு பரவலாகச் செயல்படுவதற்கான உரிமை எந்தச் சட்ட அல்லது அரசியலமைப்புச் சட்டக் கட்டமைப்பின் கீழ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள்.
  • பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் பிற ஒருங்கிணைக்கப்பட்ட நிகழ்வுகளுக்கான அனுமதிகள் மற்றும் விதிமுறை இணக்க ஏற்பாடுகள் குறித்த தகவல்கள்.

இந்தியாவின் அரசியலமைப்பு சார்ந்த ஜனநாயகத்தில், எந்தவொரு அமைப்பும் சட்டத்திலிருந்து விலக்கு பெற முடியாது. ஆர்.எஸ்.எஸ் தனது செயல்பாடுகள், நிதி விவகாரங்கள் மற்றும் சட்டப்பூர்வ நிலை ஆகியவற்றை பகிரங்கமாக வெளியிடுவதன் மூலம், ஒரு வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூறக்கூடிய அமைப்பாகத் திகழ்வதற்கான முன்மாதிரியை அமைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், எழுத்துப்பூர்வமான பதிலை அளிக்கவும் தங்கள் அதிகாரப்பூர்வப் பிரதிநிதிகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று கடிதத்தில் கூறியுள்ளார்.

Tags : RSS ,Minister ,Priyank Kharge ,Mohan Bhagwat ,Bengaluru ,Karnataka ,
× RELATED ஜம்மு எல்லையில் வட்டமிட்ட பாக். டிரோன்