ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக்கு அருகில் உள்ள கிராமத்தின் மீது சந்தேகத்திற்குரிய வகையில் பாகிஸ்தான் டிரோன் வட்டமடித்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு சுந்தர்பானி பகுதியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியப் பகுதிக்குள் ஒளிரும் விளக்குடன் கூடிய டிரோன் வந்துள்ளது. மகாதேவ் கேப் மற்றும் கலால் கிராமம் ஆகியவற்றுக்கு இடையே சிறிது நேரம் வட்டமடித்த அந்த சந்தேகத்திற்குரிய டிரோன் பின்னர் திரும்பிச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போதைப்பொருட்கள் அல்லது ஆயுதங்கள் போன்ற பொருட்கள் ஏதேனும் வான்வழியாக வீசப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் பாதுகாப்புப் படையினர் நேற்று அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். எனினும் எந்த பொருளும் கண்டெடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
