கோசாலையில் இருந்து மீட்கப்பட்ட வடமாநிலத்தவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு: கோட்டாட்சியர் நடவடிக்கை

திருவள்ளூர், ஜூன் 4: ஊத்துக்கோட்டை அருகே கோசாலையில் இருந்து மீட்கப்பட்ட 41 நபர்களுக்கு, அரசு சார்பில் தலா ரூ.30,000 விடுவிப்பு ஆணையினை, கோட்டாட்சியர் சு.ரவிச்சந்திரன் வழங்கி, அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், தேவந்தவாக்கம் கிராமத்தில் ஸ்ரீ கோகுல கிருஷ்ணா கோசாலா உள்ளது. இந்த, கோசாலாவில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 18 குடும்பங்களை சேர்ந்த 22 ஆண்கள், 19 பெண்கள் என 41 நபர்கள் 8 குழந்தைகளுடன் பணியாற்றி வந்தனர்.

கடந்த, 31ம் தேதி 49 நபர்களும் பெண்ணலூர்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று, கோகுல கிருஷ்ண கோசாலாவில் பணிபுரிவதற்காக நாள் ஒன்றுக்கு ஆண்களுக்கு 500 ரூபாயும், பெண்களுக்கு 300 ரூபாயும் சம்பளமாக தருவதாக கோசாலாவின் உரிமையாளர் நடராஜன் (65) என்பவர் உறுதிமொழி அளித்ததாலும், அனைவருக்கும் பயணச் செலவை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்ததால், நாங்கள் அனைவரும் கடந்த மே மாதம் 5ம் தேதி கோசாலையில் பணியில் சேர்ந்தோம். தங்களுக்கு பயணச் செலவு மற்றும் இதர செலவுகளுக்கு ரூ.75 ஆயிரம் முன்பணம் தந்தார். அதன் பின்னர் தாங்கள் பணிபுரிந்த 26 நாட்களுக்கு சம்பளம் ஏதும் தராமல் 12 மணி நேரம் வேலை வாங்கியதாகவும், வேலை செய்யும்போது தங்களை அடித்து துன்புறுத்தியதாக புகார் கூறினர்.

மேலும் மன்மோகன் என்பவரின் வலது நடுவிரல் இயந்திரத்தில் சிக்கிக் கொண்டு விபத்து ஏற்பட்டபோது கோசாலையின் உரிமையாளர் மருத்துவ உதவி ஏதும் செய்யாமல் அலட்சியப்படுத்தியதால், நாங்களே கச்சூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவம் பார்த்தோம். கோசாலை உரிமையாளரிடம், தாங்கள் இங்கே பணிபுரிய விருப்பமில்லை, நாங்கள் பணிபுரிந்த நாட்களுக்கான சம்பளத்தை கொடுங்கள், நாங்கள் சொந்த ஊருக்கு சென்றுவிடுகிறோம் என்று கூறியபோது, உங்கள் யாருக்கும் எந்தபணமும் கொடுக்கமுடியாது, மீறிசென்றால் கோசாலையில் இருந்து திருடிச் சென்றதாக காவல்துறையில் புகார் கொடுத்து, அனைவரையும் ஜெயிலில் தள்ளிவிடுவேன் என்று மிரட்டியதால் உரிமையாளருக்கு தெரியாமல் தப்பி வந்தாக தெரிவித்தனர்.

இந்த, புகார் தொடர்பாக மாவட்ட கலெக்டர் கவிதா உத்தரவின்பேரில், வருவாய் கோட்டாட்சியர் சு.ரவிச்சந்திரன் கோசாலைக்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டு, 49 நபர்களையும் பெண்ணலூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்க வைத்து, அரசு செலவில் உணவு மற்றும் இதர வசதிகள் செய்து கொடுத்தார். மேலும், 41 தொழிலாளர்களையும் கொத்தடிமை முறையில் நடத்திய குற்றத்திற்காக வருவாய் ஆய்வாளர் பாலாஜி கொடுத்த புகாரின்பேரில், கோசாலை உரிமையாளர் நடராஜன் மீது மனித வணிகப் பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனைத்தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் சு.ரவிச்சந்திரன், மீட்கப்பட்ட 41 நபர்களுக்கும் அரசு சார்பில் ஒவ்வொரு நபருக்கும் வங்கி கணக்கில் நிவாரணத் தொகையாக ரூ.30 ஆயிரம் செலுத்தி, விடுவிப்பு ஆணையையும் வழங்கினார். தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு ரயில் மூலம், அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Related Stories: