ஈரோடு: அதிமுக.வில் அரசியல் நோய் உள்ளதை மதிநுட்பத்துடன் அறிந்த செங்கோட்டையன் அங்கிருந்து விலகி தவெக.வில் இணைந்துள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் கூறினார். ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் அருண்ராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கும், ஏழை, எளிய கிராமப்புற மாணவ-மாணவிகளுக்கும் எதிரானது என்பது தான் தவெகவின் உறுதியான நிலைப்பாடு. கல்வி, மருத்துவம் இரண்டும் மாநில பட்டியலுக்கு வர வேண்டும். அதிமுக தலைமை சரி இல்லை என்ற காரணத்தினால் மட்டுமே அக்கட்சியினர் தவெக.வை நம்பி வராங்க. அதனால், நாங்கள் ஆதரிக்கிறோம்.
தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு போய் விட்டது. அந்த கட்சி என்னென்ன காரணங்களுக்காக தோல்வி அடைந்ததோ, அதை தான் நான், அந்த கட்சியில் உள்ள அரசியல் நோய் என குறிப்பிட்டேன். இதை அமைச்சர் செங்கோட்டையன் மதிநுட்பத்துடன், டைக்னோஸ் செய்து, அந்த கட்சியில் இருந்தால் கண்டிப்பாக எதிர்காலம் நன்றாக இருக்காது என்பதை அறிந்து, தவெக.வில் இணைந்திருக்கிறார், என்றார்.
அரசியல் நோய் வாய்ப்பட்ட கட்சியில் இருந்து தான் தற்போது முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் தவெக.வுக்கு வருகின்றனர். அதனால், அந்த நோய் தவெக.வுக்கு வராதா? என நிருபர்கள் கேட்டதற்கு, ஒரு நோய் தன்மையுடன் இருக்கிற வார்டில் இருந்து வெளியில் வந்து விட்டனர். அவ்வளவு தான் விடுங்க. நாங்க சரி பண்ண போறோம் என்றார்.
