×

ஆந்திராவில் மோட்டார் மூலம் நீர் திருட்டு ஜீரோ பாயின்ட்டுக்கு கிருஷ்ணா நீர் வரத்து குறைந்தது

சென்னை: ஊத்துக்கோட்டை அருகே கிருஷ்ணா கால்வாயில் நீர் வரத்து குறைந்து வருகிறது. இதற்கு ஆந்திர விவசாயிகள் மோட்டார் மூலம் நீரை உறிஞ்சுவதே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னையில் உள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு கங்கா நதிநீர் ஒப்பந்தப்படி 15 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். இதில் 3 டிஎம்சி சேதாரம் போக, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்.

இந்நிலையில் கண்டலேறு அணையில் 2வது தவணை தண்ணீர் கடந்த மார்ச் மாத இறுதியில் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் 4 டிஎம்சி வரவேண்டிய தண்ணீர் 1 டிஎம்சி மட்டுமே வந்தது. இதனை தொடர்ந்து, மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட தண்ணீர் கண்டலேறுவில் இருந்து மீண்டும் வினாடிக்கு 1900 கன அடி வீதம் 10 நாட்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்பட்டது, இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் கடந்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைப்பாக்கம் ஜீரோ பாயின்டிற்கு கடந்த 28ம் தேதி வந்தடைந்தது.

இந்த தண்ணீர் ஜீரோ பாயின்டில் தொடக்கத்தில் வினாடிக்கு 50 கன அடியாக வந்தது. படிப்படியாக உயர்ந்து 5ம் தேதி 172 கன அடியும், கடந்த வாரம் 300 கன அடியாகவும் வந்த தண்ணீர், தற்போது 280 கன அடியாக குறைந்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் குறைந்து வருகிறது. இதற்கு காரணம் ஆந்திர விவசாயிகள் நீரை மோட்டார் மூலம் உறிஞ்சி எடுப்பது தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Andhra Pradesh ,Krishna ,Chennai ,Uthukottai ,Telugu Ganga river ,Chennai… ,
× RELATED திருமணத்தை மீறி பிரபல நடிகையுடன்...