ஓமலூர்: ஓமலூர் அருகே வழித்தட பிரச்னையில், இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், பெண் ஒருவரை தவெக பிரமுகர் கொடூரமாக தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த அமரகுந்தியை சேர்ந்த விவசாயி அருணாச்சலம் (62). இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் முத்தண்ணன் குடும்பத்தினருக்கும் இடையே, நீண்ட காலமாக வழித்தட பிரச்னை இருந்து வந்தது.
இந்நிலையில், அருணாச்சலம் தனது நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது பாறைகள் உடைந்த துகள்கள் மற்றும் தூசி, முத்தண்ணனின் வீட்டின் மேல் படிந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முத்தண்ணன், அவரது தந்தை பரந்தாமன், சகோதரர் சந்திரமோகன் மற்றும் குடும்பத்தினர், அருணாச்சலம் மற்றும் அவரது மனைவி வசந்தாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, அவர்களை சரமாரியாக தாக்கினர். இதற்கு பதிலடியாக அருணாச்சலம் தரப்பினரும், முத்தண்ணன் குடும்பத்தினரை தாக்கினர். இந்த மோதலில் இருதரப்பினரும் காயமடைந்து, சிகிச்சைக்காக சேலம் மற்றும் ஓமலூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதலின் போது, முத்தண்ணன் , தன்னை தாக்க வந்த பெண்ணின் தலைமுடியை கொத்தாக பிடித்துக்கொண்டு, முகத்திலேயே கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில், தொளசம்பட்டி போலீசார் இருதரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முத்தண்ணனின் தந்தை பரந்தாமன், அதிமுக கிளை செயலாளராக உள்ளார். ஆனால், முத்தண்ணன் சமீப காலமாக தவெகவுக்கு ஆதரவாக செயல்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், அவர் தவெகவில் இல்லை. அவருக்கும், கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என தாரமங்கலம் வடக்கு ஒன்றிய தவெக தலைமை விளக்கம் அளித்துள்ளது.
