மதுரை: தமிழக நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவின் கீழ் 40 கோட்டங்கள் செயல்படுகின்றன. துறையின் கீழ் மாவட்டச்சாலை, மாவட்ட முக்கிய சாலை, மாநில நெடுஞ்சாலை, இதரமாவட்ட சாலைகள் என, 73,150 கி.மீ தூர சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த அலுவலகங்களில் தட்டச்சு, தொழில்நுட்ப உதவியாளர், அலுவலக உதவியாளர், சாலை பணியாளர் என பல்வேறு பணிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு மாதச்சம்பளமாக ரூ.8 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வந்தது.
தேர்தலில் வெற்றி பெற்றப்பின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஆதவ் அர்ஜூனா, துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் பணிகளுக்காக எவ்வித தொகையையும் வழங்க வேண்டாம் என உத்தரவிட்டார். இதனால், கடந்த மூன்று மாதங்களாக துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட சாலை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான தொகை வழங்கப்படாததால், பல மாவட்டங்களில் சாலை சீரமைப்பு பணிகள் முடங்கி கிடப்பதுடன், அவற்றில் ஈடுபடுத்தப்படும் தற்காலிக ஊழியர்களும் வேலை இழந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
நெடுஞ்சாலைத்துறை தற்காலிக ஊழியர்கள் கூறும்போது, ‘‘துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால், உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்களுக்கு உதவிடும் விதமாக 5 மாவட்டங்களைச் கொண்ட ஒரு சரகத்திற்கு 500 பேர் வீதம் தமிழகம் முழுதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினக்கூலி அடிப்படையில் பல்வேறு நிலைகளில் பணியமர்த்தப்பட்டிருந்தோம். ஆண்டுதோறும் மாவட்டத்திற்கேற்ப ரூ.50 கோடியிலிருந்து அதற்கு மேல் வழங்கப்படும் சாலை பராமரிப்பு தொகை வழங்கப்படாததால், அந்த பணிகளை மேற்கொள்ள முடியாததுடன், எங்களுக்கு ஊதியமும் வழங்க முடியவில்லை எனக்கூறி, அதிகாரிகள் பணிநீக்கம் செய்துள்ளனர். இதனால், தென்மாவட்டங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்டோர் பணியை இழந்துள்ளோம். இதே நிலையே மற்ற சரகங்களிலும் நடக்கிறது.
ஒவ்வொருவரும் 5 முதல் 15 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்த நிலையில், திடீரென எங்களை வேலையை விட்டு நிறுத்தியிருப்பது, வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. அரசு இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்’ என்றனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘சாலை பராமரிப்பு தொகையை பல்வேறு காரணங்களை கூறி அரசு நிறுத்தியுள்ளதால், பல மாவட்டங்களில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க முடியாமல் திண்டாடி வருகிறோம். பொதுமக்கள் சாலை சேதமடைந்துள்ளதை கண்டித்து எங்களைத்தான் கேள்வி கேட்டு குடைகின்றனர். உயரதிகாரிகளும் எங்களின் கோரிக்கையை ஏற்று அரசிடம் நிதியை ஒதுக்கச் சொன்னபாடில்லை’’ என்றனர்.
மாநிலம் முழுக்க வளர்ச்சி திட்டப்பணிகள் முடக்கம்
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கான கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை கட்டிடங்கள் கட்டுவது போன்ற பணிகளை பொதுப்பணித்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு, கட்டுமானப்பிரிவு, மின்னியல் பிரிவு ஆகியவை மேற்கொள்கின்றன. தவெக அரசின் பொதுப்பணி, நெடுஞ்சாலைகள், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற ஆதவ் அர்ஜூனா பிறப்பித்த உத்தரவால், இத்துறைகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டிடங்களுக்கான பணப்பட்டுவாடா நிறுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பல இடங்களில் அரசின் வளர்ச்சித் திட்டங்கள் முடங்கி கிடப்பதாக குற்றச்சாட்டுவுகள் குவிகின்றன.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அமைச்சர் தலைமையில் கடந்த மாதம், துறைரீதியாக நடந்த முதல் ஆலோசனை கூட்டத்தில் மறுஉத்தரவு வரும் வரை எந்த திட்டங்களுக்கும் பணப்பட்டுவாடா செய்ய வேண்டாமென முதன்மை தலைமை பொறியாளர் மூலமாக அனைத்து மண்டல, கண்காணிப்பு மற்றும் செயற்பொறியாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக, பணம் பட்டுவாடா வழங்கக்கூடிய இணையதள முகவரி மற்றும் அடையாள எண் ஆகியவை முடக்கி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அமைச்சர் தலைமையில் நடந்த அனைத்து ஒப்பந்ததாரர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், ‘முடிக்கப்பட்ட பணிகளுக்கு பணப்பட்டுவாடா செய்ய வேண்டுமென’ ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை வைத்தும் அமைச்சர் தரப்பிலிருந்து தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படாததால், மாநிலம் எங்கும் பல இடங்களில் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், வளர்ச்சி பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது’’ என்றனர்.
