×

வண்டல் மண் எடுக்க போராடினால் சிறை என மிரட்டிய செங்கோட்டையன் இருந்தால் தூய்மை அரசுக்கு சாத்தியமில்லை: விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கொந்தளிப்பு

ஈரோடு: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தபோது, பவானிசாகர் அணையில் விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதியளித்ததில், பல கோடி ரூபாய் வருமானம் பார்த்தவர்.

தற்போது தவெக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறார். செங்கோட்டையன் போன்ற அமைச்சர்களை வைத்துக்கொண்டு தூய்மையான ஆட்சியை நடத்துவது என்பது சாத்தியம் இல்லாத காரியம் என்பதை முதலமைச்சர் ஜோசப் விஜய் புரிந்து கொள்ள வேண்டும். பவானிசாகர் அணையில் வண்டல் மண் எடுப்பதில் விவசாயிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்பியிருந்தோம். ஆனால், வண்டல் மண் எடுக்க இனி போராடினால் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிடுவேன் என செங்கோட்டையன் மிரட்டுகிறார்.

குறிப்பாக, விவசாயிகளை அவதூறாக பேசியதோடு, மிரட்டல் விடுத்திருப்பது அமைச்சர் செங்கோட்டையனின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது. இவ்வளவு நாட்களாக வண்டல் மண் எடுப்பதற்கு அதிகாரிகள் இடையூறு செய்வதற்கான காரணம் யார்? என்பது தெரிந்துவிட்டது. எனவே, விவசாயிகள் மீது அவதூறு பரப்பி மிரட்டல் விடுத்த அமைச்சர் செங்கோட்டையன் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Tags : Sengottaiyan ,Farmers' Protection Association ,Erode ,Tamil Nadu Farmers' Protection Association ,Revenue Minister ,AIADMK ,Bhavanisagar dam.… ,
× RELATED மெரினா கடற்கரையில் மாயமான 2 வயது பெண்...