×

கென்யாவிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு விமானத்தில் வந்த கைக்குழந்தை நடுவானில் திடீர் உயிரிழப்பு

சென்னை: கென்யாவில் இருந்து துபாய் வழியாக, மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு வந்த பிறந்த இரண்டு மாதமே ஆன பெண் குழந்தை நடுவானில் திடீரென உயிரிழந்தது. கென்யா நாட்டைச் சேர்ந்த தம்பதி முவய் -முதொனி. இவர்களுக்கு 58 நாட்களுக்கு முன்பு எலினா என்ற பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததிலிருந்தே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. அங்குள்ள மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது, குழந்தையின் இதயத்தில் சிறிய ஓட்டை இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கென்யா நாட்டு மருத்துவர்கள் குழந்தையை, சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றால், அங்கு சிகிச்சை அளித்து குணப்படுத்தி விடலாம் என்று கூறியுள்ளனர். கென்யாவில் இருந்து சென்னைக்கு நேரடி விமானம் இல்லாததால் கென்யா நாட்டிலிருந்து, துபாய் விமான நிலையத்திற்கு குழந்தையுடன் வந்த தம்பதி, நேற்று முன்தினம் (சனிக்கிழமை) காலை துபாயிலிருந்து, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் சென்னைக்கு வந்தனர்.

இந்த விமானம் சென்னையை நெருங்கிக் கொண்டு இருந்தது. அப்போது குழந்தைக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. விமானிக்கு இத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு, விமானத்தில் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்து வரப்படும் சுமார் 2 மாத கைக்குழந்தைக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது. எனவே விமான நிலைய மருத்துவக் குழுவினரை தயார்படுத்தி வைப்பதோடு, இந்த விமானத்திற்கு முன்னுரிமை அளித்து, தரையிறங்க ஏற்பாடுகள் செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

அதன்படி காலை 8.15 மணிக்கு சென்னையில் தரையிறங்க வேண்டிய எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 23 நிமிடங்கள் முன்னதாக, காலை 7.52 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. உடனடியாக விமான நிலைய மருத்துவக் குழுவினர், விமானத்துக்கு ஏறி, குழந்தையை பரிசோதித்தனர். ஆனால் குழந்தை உயிரிழந்து விட்டது தெரிய வந்தது. இதையடுத்து கென்ய தம்பதி கதறி அழுதனர். சக பயணிகளும் சோகத்தில் மூழ்கினர். இந்நிலையில் சென்னை விமான நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, குழந்தை எலினா உடலை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனர். அதோடு வெளிநாட்டு குழந்தையாக இருப்பதால், அதற்கென சில குடியுரிமை நடைமுறைகள் செய்ய வேண்டியது இருந்தது. அந்த குடியுரிமை நடைமுறைகள் செய்து முடிக்கப்பட்ட பின்பு, குழந்தை உடல் சென்னை விமான நிலையத்தில் இருந்து, செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதயத்தில் ஓட்டை விழுந்த குழந்தையை, இந்தியாவில் சென்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையுடன் 2 மாத கைக்குழந்தையை, கென்யாவில் இருந்து துபாய் வழியாக சென்னைக்கு கொண்டு வந்த கென்யா தம்பதி சென்னை விமான நிலையத்தில் ஏமாற்றம் அடைந்து, உயிரற்ற குழந்தையின் உடலுடன் விமான நிலையத்தை விட்டு வெளியேறிய சம்பவம் சென்னை விமான நிலையத்தில், சக பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் அனைவரின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Chennai ,Kenya ,Dubai ,Muwai ,Muthoni ,Elena ,
× RELATED முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு நாளை விசாரணை!