×

மனித மூளையின் 3டி அட்லஸ்: சென்னை ஐஐடி சாதனை

சென்னை: சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை ஐஐடியின் சுதா கோபாலகிருஷ்ணன் மூளை மையம் (SGBC) உருவாக்கிய ‘ஆங்கர்’ (ANCHOR – Atlas of Neurochemical Characterization of the human brainstem with 3D Reconstruction) என்பது, பிறப்பதற்கு முந்தைய காலம் முதல் குழந்தைப் பருவம், முதிர்ந்த வயது வரையிலான மனித மூளைத்தண்டின் இதுவரை இல்லாத அளவிற்கான மிக விரிவான, பன்முக 3டி வரைபடங்கள், அட்லஸ்களை உள்ளடக்கியதாகும்.

இந்த வரைபடங்கள், நூற்றுக்கணக்கான தொடர் வெட்டுப் பகுதிகளிலிருந்து மறுவடிவமைப்பு செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட மூளைத்தண்டு உட்கருக்கள், நரம்பு இழைப் பாதைகளைக் கொண்டுள்ளன. வெவ்வேறு நரம்பியல்-வேதியியல் செல் வகைகளைக் கண்டறிவதற்காக, 500க்கும் மேற்பட்ட வெட்டுப் பகுதிகளில் 8 வகையான நோய் எதிர்ப்பு அம்சங்களுடன் இந்த விரிவான வரைபடமாக்கல் சாத்தியமாக்கப்பட்டுள்ளது.

இந்த அதிநவீன ஆராய்ச்சியின் பலன்கள் உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள், நோயாளிகளுக்குச் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், ஆராய்ச்சியாளர்கள் ‘ஆங்கர்’ வரைபடங்களை https://anchor.humanbrain.in இணையதளத்தின் மூலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளனர். ஜூன் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை வரை சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற 3வது பிரிக்ஸ் நரம்பியல் மாநாட்டில் ‘ஆங்கர்’ வெளியிடப்பட்டது. பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த முன்னணி நரம்பியல் விஞ்ஞானிகள், மருத்துவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது. இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் தலைமை விருந்தினராகப் பங்கேற்ற நிகழ்வில் ஆங்கர் வெளியிடப்பட்டது. இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன், சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி ஆகியோருடன், தொழில்துறை தலைவர்கள், நன்கொடையாளர்கள், கொடையாளர்கள், உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில், ‘‘இவ்வுலகம் கண்ட மிகச் சிக்கலான படைப்பான மனித மூளையின் ஆராய்ச்சி எல்லைகளில் இந்த ஆராய்ச்சியை சென்னை ஐஐடி முன்னிறுத்துகிறது. இம்மையம் வெறிநாய்க்கடி, ஞாபகமறதி நோய், அல்சைமர் போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் மூளைகளையும் ஆய்வு செய்து வருகிறது. நோய்களின் காரணமாக மூளையின் அடிப்படை அமைப்பில் என்ன நடக்கிறது என்பதை நாம் கண்டறிவதற்கான வழி இப்போது நமக்குக் கிடைத்துள்ளது. மனித மூளையில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதில் இது மிக முக்கிய முதல்படியாகும்’’ என கூறினார்.

Tags : IIT Chennai ,Chennai ,Sudha Gopalakrishnan Brain Centre ,SGBC ,
× RELATED முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு நாளை விசாரணை!