சென்னை: சூனாம்பேடு அருகே மின்வெட்டு காரணமாக செயற்கை சுவாசம் சிகிச்சையில் இருந்த மூதாட்டி உயிரிழந்ததையடுத்து, மின்வாரியம் மீது வழக்கு தொடர போவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு அடுத்த மாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் இருசன் என்பவரின் மனைவி கருப்பாயி (75). இவர் உடல்நல குறைவால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட அவருக்கு வயது மூப்பு காரணமாக செயற்கை சுவாசம் (வென்டிலேட்டர்) அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த கிராமத்தில் மின் பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக கருப்பாய்க்கு வழங்கப்பட்டிருந்த செயற்கை சுவாச சிகிச்சை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் சுவாசமின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவருடைய தம்பி கூறுகையில், தொடர் மின்வெட்டு காரணமாக எனது அக்கா உயிரிழந்துள்ளார். இதற்காக மின்வாரியம் மீது வழக்கு தொடருவேன் என தெரிவித்துள்ளார்.
