புதுடெல்லி: மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி அதிருப்தி எம்பிக்களை சந்திக்க டெல்லி வந்துள்ளார். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜியின் 15 ஆண்டு கால ஆட்சியை வீழ்த்தி பாஜக அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல்வர் நாற்காலியில் சுவேந்து அதிகாரி அமர்ந்தார். இந்த தேர்தல் தோல்விக்கு பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்தது. கட்சியின் மூத்த தலைவர்களுக்கும், தலைமைக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சி பல்வேறு பிளவுகளை சந்தித்தது. இந்த நிலையில், கட்சியின் அடிமட்ட கட்டமைப்பை சிதைக்கும் வகையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் முதல்வர் சுவேந்து அதிகாரி நடத்திய நிர்வாக கூட்டங்களில் பங்கேற்று வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்பிக்கள் சுமார் 20 பேர் கொண்ட குழுவினர், டெல்லியில் முகாமிட்டுள்ளனர். மூத்த எம்பி ககோலி கோஷ் தஸ்திதார், சதாப்தி ராய் மற்றும் சுதீப் பந்தோபாத்யாய் ஆகியோர் தலைமையிலான இந்த குழுவினர், இன்று (ஜூன் 14) டெல்லி வருகை தரும் முதல்வர் சுவேந்து அதிகாரியை சந்திக்கின்றனர். நாளை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை நேரில் சந்திக்கும் இந்த அதிருப்தி குழுவினர், ‘நாங்கள் தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ்’ என்று உரிமை கோர உள்ளனர். மேலும் நாட்டின் நலன் கருதி ஒன்றிய அரசின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும் அவர்கள் முடிவெடுத்துள்ளனர். இதற்கிடையே, கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தி, அதிருப்தி எம்பிக்களை கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
