உத்தரபிரதேசத்தில் 2027ம் ஆண்டு பாஜக வென்றால் இதுவே கடைசி தேர்தல்: சமாஜ்வாதி தலைவர் யாதவ் ஆவேசம்

மெயின்புரி: வரும் 2027ம் ஆண்டு தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் நாட்டில் ஜனநாயகம் அழிந்துவிடும் என அகிலேஷ் யாதவ் எச்சரித்துள்ளார். உத்திரப் பிரதேச மாநிலத்தின் காஸ்கஞ்சிலிருந்து மெயின்புரி வழியாகச் சைபாய் நோக்கிச் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார். குறிப்பாக, மாநிலத்தில் நிலவும் மின்சாரத் தட்டுப்பாடு மற்றும் பொருளாதாரச் சரிவு குறித்து தனது கவலையைப் பதிவு செய்தார்.

ஏற்கனவே நடந்த மேற்கு வங்கத் தேர்தலுக்குப் பின் மம்தா பானர்ஜி மீது வழக்குகள் தொடரப்பட்டதையும், உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனக்கு எதிரான வழக்குகளைத் திரும்பப் பெற்றதையும் சுட்டிக்காட்டிய அவர், இது போன்ற நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவால் என்று குற்றம் சாட்டியிருந்தார். மேலும், பாஜக ஆட்சியின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார். இந்நிலையில், வரவிருக்கும் 2027ம் ஆண்டு உத்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், அதுவே நாட்டின் கடைசித் தேர்தலாக இருக்கும் என்று அகிலேஷ் யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளால் பாஜவை எளிதில் தோற்கடிக்க முடியும். உத்திரப் பிரதேசத்தின் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிடப் போவதாக ராகுல் காந்தி கூறியிருப்பது, பாஜவை வீழ்த்தும் இரட்டிப்பு பலத்தைக் காட்டுகிறது. பாஜக தொண்டர்கள் நில அபகரிப்பு மற்றும் ஊழலில் ஈடுபடுவது இரட்டை இன்ஜின் அரசின் தோல்வியையே உணர்த்துகிறது. பாஜக தலைவர்கள் தரம் தாழ்ந்த அரசியல் பேச்சுகளைத் தவிர்த்து, நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும்’ என்று கூறினார்.

Related Stories: