அசாமில் கோர விபத்து; விமானப்படை விமானம் விழுந்து 2 அதிகாரிகள் உட்பட 5 பேர் பலி: துணை விமானி உயிர் தப்பினார்

கவுஹாத்தி: அசாமில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போக்குவரத்து விமானம் இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு அதிகாரிகள் உட்பட 5 வீரர்கள் உயிரிழந்தனர். அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தில் ரோரியா பகுதியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போக்குவரத்து விமானம் வழக்கமான பயணத்தை மேற்கொண்டது. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட அன்டோனோவ் ஏஎன்-32 ரகத்தை சேர்ந்த இந்த விமானம் நேற்று காலை சுமார் 10 மணியளவில் விமானப்படைக்கு சொந்தமான தளத்தில் தரையிறங்க முயற்சித்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக போக்குவரத்து விமானம் இரண்டாக உடைந்து விபத்துக்குள்ளானது. பலத்த சத்தத்துடன் உடைந்த விமானம் உடனடியாக தீப்பிடித்து எரியத்தொடங்கியது. விபத்தை அடுத்து அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. விபத்தை தொடர்ந்து அவசரகால மீட்பு குழுக்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் அங்கு விரைந்தன. இது குறித்து தகவல் அறிந்த விமானப்படையின் மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தப்பட்டன.

இந்த விபத்தில் விமானப்படை அதிகாரிகள் உட்பட உட்பட 5 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் ஸ்குவாட்ரன் லீடர் பிரசாந்த் சிங், ப்ளைட் லெப்டினன்ட் சுபம் குமார், சார்ஜென்ட் ஜிதேந்திர சர்மா, அக்னிவீரர்கேமராம் குமாவத் மற்றும் தானிஷ் ஆலம் என அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் விமானத்தில் மொத்தம் ஆறு பேர் பயணம் செய்த நிலையில் துணை விமானி மட்டும் பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இவர் ஜோர்ஹாட்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தை அடுத்து விமானப்படை தளம் முழுமையாக மூடப்பட்டது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்திய விமானப்படை ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. இந்த துயர நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் உறுதுணையாக நிற்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

விபத்துக்கான காரணத்தை கண்டறிவதற்கு விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஜோர்ஹட் விமானப்படை நிலையத்தில் இருந்து சாபுவா ராணுவ தளத்திற்கு செல்ல இருந்த அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையிறங்க அனுமதி கோரியதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தரையிறங்கும்போது விமானத்தின் மீதான கட்டுப்பாடு இழக்கப்பட்டு அது ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது விமானங்களுக்கான இணைய பாதையை கடந்து சென்று இரண்டு துண்டுகளாக உடைந்த நிலையில் தீப்பிடித்து எரிந்ததாகவும் விமானப்படை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஐந்து விமானப்படை வீரர்களின் மறைவு குறித்து ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். மறைந்த வீரர்களின் துணிச்சலும் தேசத்திற்கான சேவையும் எப்போதும் பெருமையுடனும், நன்றியுணர்வுடனும் நினைவுகூரப்படும் என்று தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.

* எப்படி நடந்தது விபத்து?
அசாமின் ஜோர்ஹாட் பகுதியில் நேற்று காலை சுமார் 10 மணியளவில் வழக்கமான பறப்புப் பயிற்சியின்போது இந்த விபத்து ஏற்பட்டது. தரையிறங்கும்போது, ​​ரஷ்ய தயாரிப்பான ‘அன்டோனோவ் ஏஎன்-32’ ரக போக்குவரத்து விமானம் விழுந்து நொறுங்கியது.

ஜோர்ஹாட் விமானப்படை நிலையத்திலிருந்து சாபுவா ராணுவ தளத்திற்குச் செல்லவிருந்த அந்த விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையிறங்க அனுமதி கோரியதாகத் தெரியவருகிறது. தரையிறங்கும் போது விமானத்தின் மீதான கட்டுப்பாடு இழக்கப்பட்டு, அது ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓடு பாதைக்கு இணையாக இருந்த ‘டாக்ஸிவே’ வழியாக வேகமாகச் சென்று, இரண்டாக உடைந்து தீப்பிடித்து எரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

* பலியானது யார், யார்?
‘அன்டோனோவ் ஏஎன்-32’ ரக போக்குவரத்து விமானத்தில் மொத்தம் 6 பேர் பயணித்தனர். இந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். உயிரிழந்தவர்கள் விவரம்:
1. ஸ்குவாட்ரன் லீடர் பிரசாந்த் சிங்
2. ப்ளைட் லெப்டினன்ட் சுபம் குமார்
3. சார்ஜென்ட் ஜிதேந்திர சர்மா
4. அக்னிவீரர் வாயு கேமராம் குமாவத்
5. அக்னிவீரர் தானிஷ் ஆலம்

* புதிய சரக்கு விமானங்கள் வாங்குவதில் தாமதம்
‘அன்டோனோவ் ஏஎன்-32’ ரக போக்குவரத்து விமானம் என்பது சோவியத்தில் வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட, இரண்டு என்ஜின்கள் கொண்ட டர்போப்ராப் ரக போக்குவரத்து விமானமாகும். உலகின் மிகக் கடினமான நிலப்பரப்புகளுக்குப் பணியாளர்களை ஏற்றிச் செல்வதிலும், அத்தியாவசியப் பொருட்களை வான்வழியாக விநியோகிப்பதிலும் இந்திய விமானப்படைக்கு இந்த விமானங்கள் பல ஆண்டுகளாக சேவையாற்றி வருகின்றன. இந்திய விமானப்படை தற்போது சுமார் 90 ஏஎன்-32 ரக விமானங்களை இயக்கி வருகிறது.

இந்த விமானங்களின் செயல்பாட்டுக் காலத்தை நீட்டிக்க, அவை பல கட்ட மேம்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்திய விமானப்படை இப்போது தனது பழைய ஏஎன்-32 மற்றும் ஐஎல்-76 விமானங்களை மாற்றுவது குறித்து பரிசீலித்து வருகிறது. பழமையான ஏஎன்-32 மற்றும் ஐஎல்-76 விமானங்களுக்குப் பதிலாக நடுத்தர ரகப் போக்குவரத்து விமானங்களை வாங்குவதற்காக, 2022-ல் இந்திய விமானப்படை அறிவிப்பு வெளியிட்டது. இந்த கொள்முதல் செயல்முறை தாமதம் அடைந்ததால் 5 வீரர்கள் உயிர் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

* விமான விபத்தில் பலியான ஸ்குவார்டன் லீடர் பிரசாந்த்சிங், சார்ஜன்ட் ஜிதேந்திர சர்மா, அக்னிவீரர்கள் கேமாரம் குமாவத், தானிஷ் ஆலம், பிளைட் லெப்டினன்ட் சுபம் குமார்.

* எத்தனை விபத்துகள்?
* 1980களின் பிற்பகுதியிலிருந்து இதுவரை ஏஎன்-32 விமானங்கள் குறைந்தது 18 விபத்துகளில் சிக்கியுள்ளன.
* 2009 ஜூன் மாதம் அருணாச்சல பிரதேசத்தில் நடந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 13 பேர் உயிரிழந்தனர்.
* 2019 ஜூன் 3ல் ஜோர்காட் விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, 13 பணியாளர்களுடன் சென்ற மற்றொரு ஏஎன்-32 விமானம் மாயமானது. ஒரு வாரத்திற்குப் பிறகு அருணாச்சல பிரதேசத்தில் அந்த விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன; அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.
* 2016 ஜூலை 22 அன்று, 29 பணியாளர்களுடன் சென்ற ஏஎன்-32 விமானம் ஒன்று வங்காள விரிகுடாவின் மீது பறந்த போது மாயமானது. 2024 ஜனவரியில் தான் வங்காள விரிகுடாவில் சுமார் 3.4 கி.மீ ஆழத்தில் அந்த விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன.
* தற்போது ஜூன் 13 அன்று அசாமில் நடந்த விபத்தில் 5 வீரர்கள் பலியாகி உள்ளனர்.

Related Stories: