சென்னை: தமிழகத்தில் ஆண்டுதோறும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் கடந்த ஏப்ரல் 15ம் தேதி தொடங்கியது. இந்த தடை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 14 கடற்கரை மாவட்டங்களை சேர்ந்த 20 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடி துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் நிறுத்தப்பட்டன.
இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகள், மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், மீன்பிடி தடை காலம் இன்று முடிவுக்கு வருகிறது. இன்று நள்ளிரவு முதல் மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க விசைப்படகுகளில் செல்வார்கள்.
இதையொட்டி காசிமேடு மீனவர்கள் தங்களின் விசைபடகுகள் மற்றும் வலைகள், ஐஸ் பெட்டிகள் உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை கடந்த சில நாட்களாக தயார் செய்து வந்தனர். இன்று நள்ளிரவு முதல் மீன்பிடிக்க செல்வதால் மீனவர்கள் மளிகை பொருட்கள், வலைகள், ஐஸ் கட்டிகள் ஆகியவை விசைப்படகில் ஏற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நள்ளிரவு முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதால் மீனவர்கள் கடலுக்கு சென்று, மீன்கள் வரத்து அதிகரித்தால் மீன்களின் விலை குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
