முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு எதிராக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? ஜூன் 29ம் தேதி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை

சென்னை: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு எதிரான லஞ்ச வழக்கை திரும்ப பெற அனுமதி கோரிய மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வரும் 29ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. கடந்த 2011 முதல் 2016 வரையிலான அதிமுக ஆட்சிகாலத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், சென்னை பெருங்களத்தூர் ஸ்ரீராம் பிராப்பர்ட்டீஸ் அடுக்குமாடி கட்டிடத்திற்கு திட்ட அனுமதி அளிக்க 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கம் சார்பில் கடந்த 2022ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டது.

2 ஆண்டுகள் தாமதத்திற்கு பிறகு, இந்த புகாரின் அடிப்படையில் 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கப் பிரிவும் வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கடந்த ஜனவரி மாதம் திமுகவில் இணைந்தார்.

இதை தொடர்ந்து, வைத்திலிங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால், வழக்கை முடித்து வைத்து லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் முந்தைய ஆட்சியில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அறப்போர் இயக்கம், அமலாக்கத் துறை தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்துக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க இருப்பதாக மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் அனைத்தும், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, வழக்கை முடித்து வைக்க எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு வைத்திலிங்கம் தரப்பில், இந்த வழக்கிற்கும் அமலாக்கத்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று வாதிடப்பட்டது. அப்போது, அறப்போர் இயக்கம் சார்பில், வழக்கு முடித்து வைப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த அறிக்கையை தங்களுக்கு வழங்க வேண்டுமென்று மனுதாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மனுக்களை பரிசீலித்த நீதிபதி, முதலில் அமலாக்கத்துறையின் மனு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பது குறித்து விசாரிக்கப்படும் என்று தெரிவித்து விசாரணையை வரும் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: