சென்னை: தனது பெயர் மற்றும் போட்டோவை பயன்படுத்த கூடாது என ரஜினிகாந்த் தனது அகில இந்திய ரசிகர் நற்பணி மன்றம் மூலம் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘ரஜினிகாந்த்தின் பெயர் மற்றும் போட்டோவை எந்த ஒரு கட்சியோ, அமைப்போ பயன்படுத்தகூடாது என ரஜினிகாந்த்தின் உத்தரவுப்படி ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகி ‘வி தி லீடர்ஸ்’ என்ற அமைப்பை தொடங்கினார். அதில் இதுவரை 17 லட்சத்திற்கும் அதிகமானனோர் இணைந்துள்ளனர். மேலும், நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அரசியலில் இறங்குவதாக அறிவித்தார். ரஜினிகாந்த்தின் மனைவி லதா கடந்த மார்ச் மாதம் ‘மக்கள் மேடை’ என்ற அமைப்பை தொடங்கினார். இந்நிலையில் தற்போது தனது பெயர் மற்றும் போட்டோவை ரஜினிகாந்த் பயன்படுத்த தடை விதித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த காலங்களில் ரஜினிகாந்த் நேரடி அரசியலில் ஈடுபட போவதில்லை என்பதை உறுதியாக அறிவித்து, தனது ‘ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தை’ மீண்டும் பழையபடி ‘ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக’ மாற்றினார். ஆனாலும் தேர்தல் நேரங்களிலும் அரசியல் நிகழ்வுகளிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் தங்களின் போஸ்டர்கள், பேனர்கள் மற்றும் சோஷியல் மீடியாக்களில் ரஜினிகாந்தின் போட்டோ மற்றும் பெயரை பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது.
சமீபத்தில் அண்ணாமலை ஆதரவாளர்கள் ரஜினிகாந்தின் புகைப்படங்களையும் பெயரையும் பயன்படுத்தி பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியிருந்தனர். இதனை தடுக்கும் விதமாக ரசிகர்களிடையே தேவையற்ற அரசியல் குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும், இந்த அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரசிகர் மன்ற தலைமைத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் பாயலாம் என்றும், ரசிகர்கள் தங்களின் பகுதிகளில் உள்ள பிற அமைப்பினர் ரஜினியின் பெயரை பயன்படுத்துவதை கண்காணித்து தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
