சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான கே.சி.வீரமணி போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். வேட்புமனுவில் பல்வேறு தகவல்களை மறைத்துள்ளதாக கூறி வேலூரை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்க வந்துள்ளார்.
இதை அறிந்து அங்கு வந்த கே.சி.வீரமணி தன்னை தாக்கியதாக நாட்றம்பள்ளி போலீசில் ராமமூர்த்தி புகார் அளித்தார். வீரமணி உள்ளிட்ட 50 பேருக்கு எதிராக வழக்குபதிவு செய்யப்பட்டது. இதில் முன்ஜாமீன் கேட்டு கே.சி.வீரமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் நான் இல்லை. என கூறப்பட்டிருந்தது.
இதேபோல, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ரமேஷ், தட்சிணாமூர்த்தி ஆகியோரும் முன் ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த 3 பேரின் மனுக்களையும் விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், மனுதாரர்கள் தங்களது வழக்கு எண்ணில் தலா 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். இரண்டு வாரங்களுக்கு நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் மூன்று பேருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
