சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் பலரும் தவெகவுக்கு தாவும் நிலையில் எடப்பாடி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் தேர்தல் தோல்வி குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் சரி, எதிர்க்கட்சி வரிசையில் அதிமுக இருந்தபோதும் சரி அதிமுகவுக்கு என்று ஓரளவு கணிசமான வாக்கு வங்கி இருந்தது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், 50 ஆண்டு கால அதிமுக வரலாற்றில் 30 சதவீதத்துக்கும் குறையாமல் அதிமுக ஓட்டு வங்கியை தக்க வைத்து இருந்தது. ஜெயலலிதா இருந்தபோது அதிகபட்சமாக 2016ம் ஆண்டு தேர்தலில் அதிமுக 41.1 சதவீத வாக்குகளை பெற்று ஆட்சி அமைத்தது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கூட, 2021ம் ஆண்டு தேர்தலில் 33 சதவீத வாக்குகள் வாங்கி, 66 எம்எல்ஏக்களை பெற்று தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்தது. எடப்பாடி பழனிசாமி 5 ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியில் முக்கிய தலைவர்கள் பலரும் ஓரம் கட்டப்பட்டார்கள். கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்கள். இது அதிமுக கட்சியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. கட்சியில் இருந்து வெளியேற்றியவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்து 2026ம் ஆண்டு தேர்தலை சந்திக்க வேண்டும், அப்போதுதான் அதிமுக பழைய நிலைமைக்கு வரும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.
ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கொள்கையில் பிடிவாதமாக இருந்து, கட்சியை விட்டு சென்றவர்கள் மீண்டும் தாய் கட்சியில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கவில்லை. இந்த பரப்பான சூழ்நிலையில்தான், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதிமுக மட்டும் 2026ம் ஆண்டு தேர்தலில் 169 இடங்களில் போட்டியிட்டு 47 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. அதிமுக வாக்கு வங்கியும் மிகவும் சரிந்து 20.66 சதவீதத்துக்கு குறைந்தது. இதனால், அதிமுக தலைமை மீது வெற்றிபெற்ற எம்எல்ஏக்கள் மட்டுமல்லாது, பல மாவட்டங்களில் உள்ள அதிமுக கட்சி நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில்தான் தமிழக சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் அதிமுக 2ஆக உடைந்தது. எஸ்.பி.வேலுமணி, சி.விசண்முகம், சி.விஜயபாஸ்கர் தலைமையில் 25 எம்எல்ஏக்கள் தனி அணியாக செயல்பட்டு தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அணியின் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கொறடா உத்தரவை மீறி 25 அதிமுக எம்எல்ஏக்கள் தவெகவுக்கு வாக்களித்துள்ளனர். அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கடிதம் கொடுத்தார். இதனால், 25 எம்எல்ஏக்களின் பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டது. இதை உணர்ந்த 25 எம்எல்ஏக்களும் அதிமுக கட்சியின் தலைமைக்கு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து, சபாநாயகரிடம் கொடுத்த கடிதத்தை வாபஸ் வாங்கினர்.
ஆனாலும், இந்த 25 எம்எல்ஏக்களின் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, சத்யபாமா ஆகிய 4 அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர். மேலும், சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இதுவரை எடப்பாடியை சந்திக்காமல் புறக்கணித்து வருகின்றனர். இவர்களும் வேறு கட்சிக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபோன்று கட்சிக்குள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்த நிலையில், தேர்தல் தோல்விக்கு பிறகு சுமார் 2 மாதத்துக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதன்முறையாக சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு இன்று காலை 10 மணிக்கு வந்தார்.
அவரை தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வளர்மதி உள்ளிட்டவர்களும் வந்தனர். அவர்களை தொடர்ந்து காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கட்சியின் தலைமை அலுவலகம் வந்தனர். அவர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது, நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக தோல்வி குறித்தும், வாக்கு சதவீதம் மிகவும் குறைந்து வருவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. முக்கியமாக, சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் அடுத்தடுத்து தவெகவில் இணைவது ஏன்? என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
நிர்வாகிகளும் கூட்டத்தில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். இதை கேட்டுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, அதிமுக கட்சியை வலுப்படுத்த ஆரோக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கட்சி நிர்வாகிகள் ஆலோசனைகளை கேட்டு கட்சி தலைமை செயல்படும். வரும் நாட்களில் படிப்படியாக மற்ற மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க கட்சி தலைமை உறுதிபூண்டுள்ளது. தற்போது அதிமுகவில் உள்ள நிர்வாகிகள் யாரும் மனம் தளர வேண்டாம், அதிமுகவுக்கு தேர்தல் தோல்வி என்பது புதிது அல்ல.
தோல்வி வந்தபோதெல்லாம் பல்வேறு எதிர்ப்புகளை கட்சி சந்தித்து, அதில் வெற்றிபெற்றுள்ளது. அதுபோல, தற்போதுள்ள பிரச்னைகளும் சரிசெய்யப்பட்டு, அதிமுக கட்சி மீண்டும் பலமான கட்சியாக, தமிழகத்தில் ஆட்சி பிடிக்கும் சக்தியாக மாறும். அதற்கு அனைவரும் இணைந்து ஒற்றுமையாக பணியாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
