சென்னை: மேட்டூர் அணையை திறக்காமல் குறுவை சிறப்பு தொகுப்பு என்பது ஏமாற்றும் திட்டம் என்றும், விவசாய கடன் தள்ளுபடி போல விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என்றும் தவெக அரசுக்கு திமுக, அதிமுக, பாஜ, பாமக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காவிரியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை குறுவை சாகுபடிக்காக திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. மேலும், கர்நாடகாவும் தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால் மேட்டூர் அணையே வறண்டுபோகத் தொடங்கியுள்ளது. இதனால் குறுவை சாகுபடி பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். ஆனால் மேட்டூரில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடாமல், குறுவைத சிறப்புத் தொகுப்பை அறிவித்துள்ளது விவசாயிகளிடம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த ஐந்தாண்டுகளில் இதே நாளில் காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் குறுவைப் பருவ நெல் சாகுபடிக்காக திராவிட மாடல் அரசின் முதல்வராக இருந்த திமுக தலைவர் முன்னின்று, மேட்டூர் அணையைத் திறந்து வைப்பது வழக்கம். அதற்கு முன்பாகவே ஆறுகள், வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடைமடை வரை தண்ணீர் பாய்வதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கும். குறுவை நெல் சாகுபடியில் சாதனை அளவை எட்டியதுடன், வேளாண்துறையில் 9 சதவீத வளர்ச்சியைக் காட்டியது திராவிட மாடல் அரசு. மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டிய நாளான இன்று(நேற்று), போதிய நீர் இல்லை என்பதால் திறக்கப்படவில்லை. வறண்ட ஆற்றைப் பார்த்து வாடிப் போய் இருக்கிறார்கள் டெல்டா விவசாயிகள். ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல, தண்ணீருக்கு வழி செய்யாமல், குறுவை சிறப்பு தொகுப்பு அறிவிக்கும் ரீல்ஸ் ஆட்சியின் முதல்வர், தனது சொந்த வேண்டுதலுக்காக கர்நாடகாவுக்கு சென்றிருக்கிறார். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி ஆணையம் வலியுறுத்தியும் தமிழ்நாட்டிற்கான 19 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா வழங்கவில்லை. அங்கே நடப்பது காங்கிரஸ் ஆட்சி. அதாவது, தேர்தலுக்கு முன்பே தவெகவுடன் ரகசிய உறவுடன் இருந்த அதே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி. டெல்லி வரை சென்று உறவு கொண்டாடி வந்திருக்கும் முதல்வர் விஜய், கர்நாடகாவில் தனது வேண்டுதலுடன், தமிழ்நாட்டு விவசாயிகளின் வேண்டுதலை மனதில் கொண்டு, காங்கிரஸ் அரசுடன் பேசி காவிரித் தண்ணீரைக் கொண்டு வருவாரா? இல்லை, விவசாயிகளின் வயிற்றில்
அடிக்கப் போகிறாரா?.
திமுக விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன்: விவசாய கடன் தள்ளுபடி வாக்குறுதியை படித்து விவசாயிகளை ஏமாற்றி வாக்கு சேகரித்த தவெகவினர் தற்போது, அதைக்கூட நிறைவேற்ற வக்கின்றி குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்து இருக்கிறார்கள். கர்நாடகத்தில் மேக தாதுவில் அணை கட்ட எல்லா முயற்சியை எடுக்கும் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு எதிராக, தனது ஆட்சி கவிழ்ந்து விட கூடாது என்கிற பயத்தில் மேகதாது அணை பிரச்னையில் வாய்திறக்கவே இந்த அரசு பயப்படுகிறது. கடந்த திமுக ஆட்சியில் மூன்றாண்டுகளில் சுமார் 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்க ஆணையிடப்பட்டு நிறைவேற்றப்பட்டன. திமுக அரசின் 4 ஆண்டு காலத்திலேயே சுமார் 42,61,386 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு சாதனை படைத்தது. ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள், குறுவை தொகுப்பு , மும்முனை மின்சாரம் போன்ற வெற்று அறிக்கைகளை வெளியிடும் முன், அண்டை மாநிலமான கர்நாடகாவில் தனது ஆட்சி நடக்க தமிழ்நாட்டில் முட்டுக்கொடுக்கும் காங்கிரஸ் கட்சி ஆள்வதால், அவர்களிடம் இணக்கமாக பேசி காவிரி நீரை பெறவேண்டும், மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து பேசவேண்டும், அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி வேளாண்மை கொள்கைகள் திட்டங்களை விவாதித்து கலந்து ஆலோசிக்க வேண்டும். விவசாய அமைப்பு பிரதிகளை அழைத்து பேசவேண்டும் . இப்படி விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும், வேளாண் வளர்ச்சிக்கும் திமுகவின் அரிய திட்டங்களில் சிலவற்றையாவது கொஞ்சம் படித்துப் பார்க்க வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 அன்று திறக்கப்படும் மேட்டூர் அணை நீர், இவ்வாண்டு திறக்கப்படாததால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் ஆளாகியுள்ளனர். குறுவை சாகுபடி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் திறப்பை பெரிதும் நம்பி இருப்பதால், இந்த நீர் வெளியீடு என்பது மிகவும் முக்கியமானது. ஏற்கனவே விவசாய பயிர்க் கடன் என்ற பெயரில் 10,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்டு இருக்கும் கடன் தொகைகளை சொன்னபடி தள்ளுபடி செய்யாமல், கடுகளவு கடனை மட்டும் அடைப்பதாக கூறி விவசாயிகளை ஏமாற்றி, அவர்களை போராட்டக் களத்திற்கு தள்ளிவிட்டுள்ள இன்றைய பொய்க்கால் குதிரை அரசு, தற்போது நீர் திறப்பு செய்யாமல், ரூ.134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
மும்முனை மின்சாரம் ஏற்கனவே விவசாயிகளுக்கு 24 மணி நேரம் அதிமுக அரசின் அறிவிப்பின்படி வழங்கப்பட்டு வருகிறது. அதை தற்போது 18 மணி நேரமாக குறைத்து அறிவித்துள்ளது இன்றைய பொய்க்கால் குதிரை அரசு. ஏற்கனவே அறிவிக்கப்படாத மின்வெட்டால் மாநிலம் முழுக்க மின்சாரம் இல்லாததால் பம்பு செட்டுகள் இயக்க முடியாத நிலை வேறு உள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் வலிகளை, வேதனைகளை கொஞ்சம் கூட புரியாமல் இன்றைய பொய்க்கால் குதிரை அரசு ஒரு வெற்று ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விவசாயிகள் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட விஷயமான இதன் தீவிரத்தை உணர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து கடைமடை வரை சென்றடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அரசை வலியுறுத்துகிறோம்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடியை ஒட்டி ஆண்டுதோறும் ஜூன் 12 ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட வேண்டும் என்பதும், இந்த ஆண்டு மேட்டூர் அணையில் நீர்வரத்து குறைவாக இருப்பதும் உங்களுக்கு நேற்று தான் தெரியுமா? வருடந்தோறும் நடக்கும் வழக்கமான நிகழ்வைக் கூட முன்கூட்டியே ஆய்வு செய்து, திட்டமிட முடியாதளவிற்கு ரீல்ஸ் எடுப்பதில் படு பிஸியாகிவிட்டீர்களோ? மேட்டூர் அணை நீர் திறந்துவிடப்பட வேண்டிய தேதியன்று வந்து, “நீர் குறைவாக உள்ளது அதனால் சிறப்புத் தொகுப்பு கொடுக்கிறோம்” என்று கதை சொல்கிறீர்களே, உங்கள் குறுவை சிறப்புத் தொகுப்பு திட்டம் என்றைக்கு செயல்பாட்டிற்கு வருவது, டெல்டா விவசாயிகள் எப்பொழுது தங்கள் நடவை ஆரம்பிப்பது? மழைநீரும் அல்லாமல், அணை நீரும் தராமல் வெறும் வடிமுனைக் குழாய்களைக் கொண்டு மட்டுமே லட்சக்கணக்கான விளைநிலங்களில் பாசனம் செய்ய முடியுமா என்ற சாத்தியக் கூறுகளை முதலில் நீங்கள் ஆராய்ந்தீர்களா? அதிலும் தமிழகத்தில் தொடர் மின்வெட்டு பிரச்னைகள் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கையில், விவசாயிகளுக்கு 18 மணிநேரம் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று நீங்கள் சொல்வது கேப்பையில் நெய் வடியும் கதையன்றி வேறென்ன? இப்படி நடைமுறை சிக்கல்கள் எதையும் தெளிவாக கண்டறியாமல், நேற்றைக்கு ஒரு திட்டத்தை தீட்டி அதை இன்றைக்கு பேப்பரில் வெளியிட்டு விளம்பரம் தேடுவதில் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை முதல்வரே. எனவே, முறையான ஆய்வுக் குழுவை அமைத்து இப்பிரச்னையை போர்க்கால அடிப்படையில் அணுகுவதோடு, முதல்வரின் நிர்வாக அலட்சியத்தால் பாதிக்கப்பட்ட குறுவை விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடுகளை ஏக்கர் வீதம் கணக்கிட்டு அரசு வழங்க வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: மேட்டூர் அணையின் நீர் இருப்பு அணையின் மொத்த கொள்ளளவான 93.47 டி.எம்.சியில் பாதிக்கும் குறைவாக 41.64 டி.எம்.சி மட்டுமே இருப்பதால் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. கடந்த சில வாரங்களாக தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படாததால் நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. தடையற்ற மும்முனை மின்சாரத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படாத நிலையில் காவிரி பாசன மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் குறுவை பருவ நெல் சாகுபடி செய்யப்பட வாய்ப்பில்லை. காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி போதிய அளவில் செய்யப்படாததால் மட்டும் ரூ.2,000 கோடி அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி. லட்சக்கணக்கான வேளாண் தொழிலாளர்கள் இதனால் வேலை இழப்பார்கள்.
இந்த நெருக்கடியான சூழலில் இருந்து உழவர்களைக் காப்பாற்றுவதற்காக காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்க வேண்டும். ஒன்றிய அரசிடம் நிதி உதவி பெற்று உழவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். மாநில அரசு அதிகாரிகள், வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், விவசாயிகள் ஆகியோர் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுகளுக்கு ஏற்பாடு செய்து இப்போதுள்ள சூழலில் உழவர்கள் குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்யலாமா என்பது குறித்து ஆலோசனைகளை வழங்க வேண்டும். ரூ.5000 இடுபொருள் மானியத்துடன் குறுவைத் தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக குறைந்தது 3 லட்சம் முதல் 4 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்படுவதை உறுதி செய்ய தடையற்ற மும்முனை மின்சாரத்தை தொடர்ந்து வழங்க வேண்டும். இந்த நடவடிக்கைகளின் வாயிலாக காவிரி பாசன மாவட்டங்களில் குறைந்தபட்ச அளவிலாவது குறுவை நெல் சாகுபடி செய்யப்படுவதையும், உழவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
