நீண்டகாலமாக பிரதமராக இருந்தவர் இந்திய அரசியல் பயணத்தில் நரேந்திர மோடி சாதனை: முன்னாள் எம்.பி கரண் சிங் பாராட்டு

புதுடெல்லி: முன்னாள் எம்.பி டாக்டர் கரண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய ஜனநாயகப் பயணத்தில் நரேந்திர மோடி மிக நீண்ட காலம் தொடர்ந்து பிரதமராகப் பதவி வகித்தவர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றுள்ளார்.  எனது வழிகாட்டியான ஜவஹர்லால் நேரு, பிரிவினை, வறுமையால் பாதிக்கப்பட்ட ஒரு துணைக்கண்டத்தை ஜனநாயகக் குடியரசாக மாற்றினார். இந்திரா காந்தியின் அமைச்சரவையில் நான் பத்து ஆண்டுகள் பணியாற்றியபோது, வங்கதேச உருவாக்கம், அவசரநிலை ஆகிய இரண்டையும் கண்டேன். பிரதமராக இந்திரா காந்தியின் மொத்த பதவிக்காலத்தை முறியடிப்பதே மோடியின் அடுத்த சவாலாகும்.நேருவின் காலத்தைவிட, மக்கள் தொகை 146 கோடியாகவும் வாக்காளர்கள் 83 கோடியாகவும் உயர்ந்த தற்போதைய இந்தியா முற்றிலும் மாறுபட்டுள்ளது. இச்சூழலில், கட்சியைத் தொடர்ந்து மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெறச் செய்தது மோடியின் சிறப்பான அரசியல் சாதனையாகும்.

கோவிட்-19 பெருந்தொற்று, உலகளாவிய பணவீக்கம், விநியோகச் சங்கிலித் தடைகளுக்கு இடையே, மோடி தலைமையில் இந்தியா அதிவேகமாக வளரும் பொருளாதார நாடாகத் திகழ்கிறது. தூய்மை இந்தியா, கிராமப்புற சுகாதாரம், சமையல் எரிபொருள், மின்மயமாக்கல், ஏழைகளுக்கான வீட்டுவசதி, உணவுப் பாதுகாப்பு போன்ற சமூக நலத் திட்டங்கள் சாதாரண மக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நேருவின் ஆட்சியில் முதலாவது ஐஐடி, எய்ம்ஸ் நிறுவனங்கள் நிறுவப்பட்ட நிலையில், இவற்றின் எண்ணிக்கை மோடியின் ஆட்சிக்காலத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது. நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், ரயில்வே நவீனமயமாக்கல், டிஜிட்டல் இணைப்பு போன்ற உள்கட்டமைப்பு மேம்பாடுகள் நீண்ட கால பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளமிட்டுள்ளன.

பணமதிப்பிழப்பு, 370-வது பிரிவு நீக்கம் போன்ற சில முடிவுகள் சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், இலக்குகளை அடைவதில் அவர் உறுதியை வெளிப்படுத்தியுள்ளார். வெளியுறவுக் கொள்கையில், உலக அளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியுள்ளார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது அவரது பதவிக்காலத்தின் முக்கிய பண்பாட்டுச் சாதனையாகும். அரசியல் கருத்துகளுக்கு அப்பாற்பட்டு, நரேந்திர மோடி இந்திய அரசியலின் மொழியை மாற்றியமைத்துள்ளார். இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தேசிய ஒருமித்த கருத்து அவசியம். எதிர்வரும் ஆண்டுகளில் நமது நாடு வலிமை, செழிப்பு, தேசிய ஒற்றுமையுடன் வளர வேண்டும். அத்தகைய பெரும் முயற்சியில், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, நாட்டுக்குச் சேவை செய்வதில் பிரதமருக்கு வெற்றி கிடைக்க வாழ்த்துவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: