சென்னை: தொடர் மின்வெட்டு ஏன் என்ற கேள்விக்கு அமைச்சர் நிர்மல்குமார் புது விளக்கம் அளித்துள்ளார். சென்னை கிண்டியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சோலார் மற்றும் மரபுசாரா எரிசக்தி துறையில் வெளிப்படை தன்மையுடன் செயல்படுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். அதற்காக புதிய கொள்கையை வகுத்து வருகிறோம். இன்னும் இரண்டு வாரத்திற்குள் அவை செயல்படுத்தப்படவுள்ளன.
மின் உற்பத்தியில் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முதலீட்டாளர்களுக்கு செய்து தரவுள்ளோம். அதுகுறித்தும் விவாதித்து வருகிறோம். மின்வெட்டு பிரச்னை ஏற்படுத்தும் நபர்களை சிசிவிடி கொண்டு கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். சிலர் வேண்டுமென்றே மின்சாரத்தை துண்டித்து வருகின்றனர். ஒரு சில இடத்தில் மீண்டும் மீண்டும் பவர் கட் செய்யப்படுவதை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கை துரிதப்படுத்தியுள்ளோம். பெரம்பூரில் மின்வெட்டு ஏற்பட்ட உடனே பியூஸ் மாற்றி அமைக்கப்பட்டது.
ஆனால் மீண்டும் மீண்டும் இரண்டு மூன்று முறை இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனை பயன்படுத்தி பொதுமக்களை சிலர் தூண்டிவிட்டு சாலைமறியல் போன்றவற்றில் ஈடுபட வைக்கின்றனர். அரும்பாக்கத்தில் மின்சார வயரை கட் செய்து வைத்துள்ளனர். அவர்களை கண்டறிந்து வருகிறோம். மின்னகம் மூலமாக வரும் புகார் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.

