டெண்டர் முறைகேடு புகார் மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்

சென்னை: பசுமை எரிசக்தி கழகத்தில் டெண்டர் முறைகேடு புகார் விவகாரத்தில் இரண்டு மின்வாரிய அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஒப்பந்தங்கள் அனைத்தும் சிண்டிகேட் அமைக்கப்பட்டு அதன் மூலம் தேர்வானவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதாக புகார் இருந்து வந்தது. இந்த நிலையில், டிரான்ஸ்பார்மர் ஊழல் குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஒப்பந்தங்கள் அனைத்தும் வெளிப்படைத்தன்மை இல்லாமல் குறிப்பிட்ட நபர்களுக்கு அதிக தொகைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு மின்வாரியத்திற்கு நஷ்டம் ஏற்படுவதாகவும் மின்வாரிய ஊழியர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் மின்துறை அமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் சமீபத்திய ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல் வழங்கியதில் வெளிப்படைத்தன்மை இல்லாமல், அவசர கதியில் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முறையான விசாரணை நடப்பதற்கும், நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கும், முறையற்ற நிர்வாக தலையீடு மற்றும் இதர குற்றச்சாட்டுகள் காரணமாக தலைமை நிதிக் கட்டுப்பாட்டு அலுவலர் (வருவாய்) வி.காசி, தலைமைப் பொறியாளர் (மரபுசாரா எரிசக்தி) பி.சந்திரசேகரன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: