கன்னியாகுமரி அருகே கொத்தனாருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: பூசாரி கைது

கன்னியாகுமரி, ஜூன் 9: கன்னியாகுமரி அருகே நாடன்குளம் ராமன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜோசப். அவரது மகன் தங்கராஜ் (37). கொத்தனார். கொட்டாரம் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆதிலிங்கம் (47). டிரைவரான இவர் நாடன்குளத்தில் உள்ள இசக்கி அம்மன் கோயில் பூசாரியாகவும் உள்ளார். இந்த நிலையில் இசக்கி அம்மன் கோயிலில் கொடை விழா நடந்தது. விழாவின் போது கோயில் வளாகத்திற்குள் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. சம்பவத்தன்று ஆதிலிங்கத்தின் மகன் ராகவேந்திரன் என்பவர் தனது பைக்கை கோயில் வளாகத்தில் நிறுத்தியதாக தெரிகிறது.

இதனை பார்த்த தங்கராஜ் கோயில் வளாகத்தில் பைக்கை நிறுத்தக்கூடாது எனக்கூறி வண்டியை எடுக்குமாறு கூறினாராம். இதனை ராகவேந்திரன் தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆதிலிங்கம் அரிவாளுடன் சென்று, கோயில் முன்பு நின்று கொண்டிருந்த தங்கராஜிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அவரை அரிவாளால் வெட்ட முயன்றார். தங்கராஜ் சுதாரித்து கொண்டு விலகினாலும் அவரது தோள்பட்டையில் வெட்டு விழுந்தது. தொடர்ந்து தங்கராஜ் ஓடவே விடாமல் துரத்தி சென்று கையில் வெட்டினார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் போடவே ஆதிலிங்கம் அரிவாளை காண்பித்து கொலை மிரட்டல் விடுத்து சென்றார். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அரிவாள் வெட்டில் காயம் அடைந்த தங்கராஜ் கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொத்தனாரை அரிவாளால் வெட்டிய ஆதிலிங்கத்தை கைது செய்தனர். இந்த சம்பவம் நாடன்குளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: