தக்கலை அருகே பைக் மீது கார் மோதி பிளஸ்2 மாணவர் பலி

தக்கலை: தக்கலை அருகே நடைபெற்ற விபத்தில் பிளஸ்2 மாணவர் உயிரிழந்தார். நாகர்கோவில் பார்வதிபுரம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் சாய் விக்னேஷ் (18). நாகர்கோவில் தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 பயின்று வந்தார். இவர் தனது உறவினர் சுங்கான்கடையை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருடன் பைக்கில் உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். தக்கலை அருகே காவிளை பகுதியில் அவர்கள் செல்லும் போது முன்னால் சென்ற கார், திடீரென பிரேக் போட்டு நின்றது.

அப்போது பைக் திடீரென நிலை தடுமாறியதில் பின்னால் அமர்ந்திருந்த சாய் விக்னேஷ் வலது பக்கமாக சரிந்து சாலையில் விழுந்தார். அப்போது எதிர வந்த அரசு பஸ்சின் பின் பக்க சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, தக்கலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதையடுத்து உடற்கூறு ஆய்வுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சிவகுமார் அளித்த புகாரின் பேரில் பாலசுப்பிரமணியம் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Related Stories: