×

அடிக்கடி ‘பவர்கட்’ உண்மைதான்: மின்வாரிய தலைவர் ஒப்புதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து, அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் மின் தேவை ஏப்ரல் மாதம் உச்சகட்டமாக 21366 மெகாவாட் இருந்தது. அதைத் தொடர்ந்து, 20 ஆயிரம் மெகாவாட் என மின் தேவை குறைந்திருக்கிறது. இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டு பிரச்னையை மறைக்கவும் மறுக்கவும் இல்லை. அதற்கு, டிமாண்ட் ஓவர் லோடு தான் காரணம். பகிர்மான காரணங்களால் இது போன்ற மின்தடை ஏற்படுகிறது.

உற்பத்திக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. தேவையான மின்சாரம் இருக்கிறது. நகர்ப்புறங்களில் கேபிள் கட், சர்வீஸ் சிக்கல் போன்ற காரணங்களால் இந்த நிலை ஏற்படுகிறது. நாளுக்கு நாள் மின் தேவை அதிகரித்து வரும் சூழல் உள்ளது. பெரிய டவர்கள், துணை மின் நிலையங்கள் தேவையும், பணியாளர் பற்றாக்குறையும் உள்ளது. பணியாளர்களை பணியமர்த்த தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மூன்று வாரத்துக்கு முன்பு ஏற்பட்ட சவால்கள் மின்தடை ஆகியவற்றை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதன் மூலம் தற்போது பிரச்னை குறைந்து வருகிறது.

தமிழ்நாட்டில் 5 லட்சம் மின் மாற்றிகள் உள்ளது. 20 ஆயிரம் மெகாவாட் தேவையுள்ள நிலையில், மின் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி குறைந்திருக்கிறது. பவர் கிரிட் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பகல் நேரங்களில் 7 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி சோலார் மூலம் கிடைக்கிறது. கோடைகாலங்களில் சந்திக்கும் சிக்கல்களை, மின்பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Tiruvannamalai ,Swami ,Tamil Nadu ,Electricity ,Managing Director ,Radhakrishnan ,Annamalaiyar Temple ,
× RELATED மேற்கு வங்கத்தில் திரிணாமுல் கவுன்சிலர் மீது முட்டை வீச்சு