பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டையில் சார்பதிவாளர் அலுவலகம், நீர்வளத்துறை உதவி பொறியாளர் அலு வலகங்களை சுற்றிலும் வளர்ந்துள்ள முட்செடிகளை அப்புறப்படுத்தவேண்டும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
ஆர்,கே.பேட்டை-பள்ளிப்பட்டு சாலையில் சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் நீர்வளத்துறை உதவி பொறியாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. சார்பதிவாளர் அலுவலகத்திற்கு தினமும் 100க்கும் மேற்பட்ட மக்கள் பத்திரப்பதிவு செய்ய வருகின்றனர். இங்கு பொதுமக்கள் அமர இருக்கை வசதி இல்லாததால் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால் பக்கத்தில் உள்ள கடைகள் அருகில் அமர்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் சார்பதிவாளர் அலுவலகம் செல்லும் முகப்பு பகுதி மற்றும் நீர்வளத்துறை உதவி பொறியாளர் அலுவலகத்தை சுற்றிலும் செடி கொடிகள் அடர்த்தியாக வளர்ந்து புதர்மண்டி உள்ளது. இதனால், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இதன்காரணமாக, அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை. எனவே, அரசு அலுவலகங்களில் தூய்மை, சுகாதாரத்தை உறுதிப்படுத்தவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
